சமூகப் பரவலின் விளிம்பில் இந்தியா: COVID-19 குறித்து கூடுதல் எச்சரிக்கை தேவை!
தமிழக அரசு பொதுமக்கள் கூட்டமாக கூடுவதற்கு வாய்ப்புள்ள அனைத்து நிகழ்வுகளுக்கும் தடை விதிக்க வேண்டும் என பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் கோரிக்கை!!
தமிழக அரசு பொதுமக்கள் கூட்டமாக கூடுவதற்கு வாய்ப்புள்ள அனைத்து நிகழ்வுகளுக்கும் தடை விதிக்க வேண்டும் என பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் கோரிக்கை!!
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது... இந்தியாவில் கொரோனா வைரஸ் நோய் பரவல் எந்த கட்டத்தை அடையக்கூடாது என்று அனைவரும் அஞ்சிக் கொண்டிருந்தோமோ, அந்த சமூகப் பரவல் கட்டத்தை நாட்டின் சில பகுதிகள் எட்டியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இத்தகைய நெருக்கடியான காலகட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் பரவலைத் தடுக்க, இன்னும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது தவிர்க்க முடியாததாகிறது.
தில்லி எய்ம்ஸ் மருத்துவ நிறுவனத்தின் இயக்குனரும், மத்திய அரசின் கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்குழுவின் உறுப்பினருமான மருத்துவர் ரந்தீப் குலேரியா இது குறித்து தெரிவித்திருக்கும் கருத்துகள் மிகவும் முக்கியமானவை ஆகும். இந்தியாவின் சில பகுதிகளில் கடந்த சில நாட்களில் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை திடீரென உயர்ந்திருக்கிறது; அப்பகுதிகளில் சமூகப்பரவல் தொடங்கி விட்டதை உணர முடிகிறது என ரந்தீப் குலேரியா கூறியுள்ளார். மத்திய சுகாதாரத் துறையின் இணை செயலாளரும் இதை மறுக்காமல் வேறு வார்த்தைகளில் ஒப்புக் கொண்டிருக்கிறார்.
அதே நேரத்தில் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் கொரோனா வைரஸ் அதன் இரண்டாம் நிலையான உள்ளூர் பரவல் நிலையில் தான் உள்ளது. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் இந்தியா கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது கட்டத்துக்கும், மூன்றாவது கட்டத்துக்கும் இடைப்பட்ட நிலையில் இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியிருப்பது இந்தியாவில் நிலைமை மோசமாகி வருவதையே காட்டுகிறது. இதைத் தடுக்க நோய்ப்பரவல் நடவடிக்கைகள் இன்னும் தீவிரப்படுத்தப்பட்டாக வேண்டும்.
கொரோனா வைரஸ் பரவல் எங்கெல்லாம் மூன்றாம் கட்டத்தை அடைந்திருக்கிறது என்பது குறித்து மருத்துவர் குலேரியா குறிப்பிட்டு எதையும் கூறவில்லை. அதேநேரத்தில், தில்லியில் நடைபெற்ற மாநாடு தான் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு திடீரென அதிகரித்ததற்கு காரணம் என்றும், அந்தப் பகுதிகளில் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். இந்த வரையரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பொருந்தும் என்பதால், நமது மாநிலத்தின் சில பகுதிகளில் அவசர நிலை இருப்பதாகக் கருதி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள சென்னை, கோவை, ஈரோடு, திண்டுக்கல், மதுரை, விழுப்புரம் உள்ளிட்ட பெரும்பான்மையான மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் ஆளான இடங்கள் அனைத்தும் மூடப்பட்டு அங்கு வீடு, வீடாக சுகாதாரத்துறை பணியாளர்கள் சென்று நோய்த்தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவை முறையான நடவடிக்கைகள் ஆகும். அத்தகைய நடவடிக்கைகள் கொரோனா வைரஸ் நோய் பரவலைத் தடுக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஆனால், அந்நடவடிக்கைகள் மட்டுமே போதுமானவை அல்ல.
இந்தியாவில் கொரோனா பரவல் தொடங்கிய நாளில் இருந்தே நான் கூறி வருவது, சமூக இடைவெளியை பராமரிப்பது மட்டும் தான் கொரோனாவுக்கு ஒரே மருந்து ஆகும். அதை கருத்தில் கொண்டு தான் தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், ஊரடங்கை பொதுமக்கள் கடைபிடிப்பதில் பல குறைபாடுகள் இருப்பது தான் கவலையளிக்கிறது. ஊரடங்கு என்பது ஒருவரும் வீட்டை விட்டு வெளியில் வராமல் இருக்கும் நிலை தான். அந்த நிலையை உறுதி செய்தால் மட்டுமே சமூகப்பரவல் எனப்படும் மூன்றாவது நிலையை தமிழ்நாடு அடைவதை தடுத்து நிறுத்த முடியும்.
கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக எய்ம்ஸ் இயக்குனரும், மத்திய சுகாதாரத்துறையின் இணை செயலாளரும் தெரிவித்துள்ள கருத்துகள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்; கொரோனா பரவல் தடுத்து நிறுத்தப்படும் வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட வேண்டும் என்று நான் கூறி வருவதை நியாயப்படுத்தியுள்ளன. தமிழகத்தின் சில பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவல் அடுத்த கட்டத்திற்கு சென்றாலும் கூட, தொடக்கத்திலேயே அதை தடுத்து நிறுத்தி விட முடியும் என்பதால் அச்சமோ, பதற்றமோ அடையத் தேவையில்லை; மாறாக கூடுதல் எச்சரிக்கையும், விழிப்பும் தான் தேவை.
எனவே, தமிழக மக்கள் ஊரடங்கு ஆணையை முழுமையாக கடைபிடித்து மிக மிக அத்தியாவசியப் பணிகளுக்காக மட்டும் தான் வெளியில் வர வேண்டும். அதுமட்டுமின்றி, தமிழக அரசு பொதுமக்கள் கூட்டமாக கூடுவதற்கு வாய்ப்புள்ள அனைத்து நிகழ்வுகளுக்கும் தடை விதிக்க வேண்டும்; ஊரடங்கு ஆணையை இப்போதையை விட இன்னும் கூடுதல் கடுமையுடன் அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.