நிக்கோபார் தீவு அருகே 300 கோடி ரூபாய் மதிப்பிலான கெட்டமைன் போதைப் பொருள், இந்திய கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக 6 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 19-ஆம் தேதி அன்று, கார் நிக்கோபார் தீவு அருகே இந்தியக் கடலோர காவல் படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். ராஜ்வீர் கப்பலில் இருந்தபடி அவர்கள் கடல் பரப்பை தீவிரமாகக் கண்காணித்தனர்.


இதன் போது சந்தேகப்படும் படியாக ஒரு கப்பல் வருவதை காவல்படையினர் கவனித்தனர். உடனடியாக அந்தக் கப்பலை வழிமறித்து சோதனை நடத்திய போது, சாக்கு மூட்டைகள் இருந்தன. அந்த மூட்டைகளுக்குள் சந்தேகப்படும் படியான பாக்கெட்டுகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.


விசாரணையில், மியான்மர் நாட்டில் இருந்து அந்தக் கப்பல் வந்ததாக கண்டறியப்பட்டது. கப்பலை சிறைபிடித்த கடலோர காவல் படை வீரர்கள், போர்ட் பிளேர் கொண்டு சென்றனர். அங்கு போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளிடம் கப்பல் ஒப்படைக்கப்பட்டது.


அதனை ஆய்வு செய்ததில் சுமார் 1160 கிலோ கெட்டமைன் போதைப் பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றின் மதிப்பு 300 கோடி வரை இருக்கலாம் என கருதப்படுகிறது. 


இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 6 பேரையும் தீவிர விசாரணைக்கு கடலோர காவல்படையினர் உட்படுத்தியுள்ளனர்.