மத்திய அரசின் கண் அசைவில், நாட்டு நலனைப் பின்னுக்குத் தள்ளி இலாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் எண்ணெய் நிறுவனங்கள், தொடர்ந்து கண்களை மூடி செய்து கொண்டிருக்கும் வானளாவிய பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 82 ரூபாய்க்கு மேலும், டீசல் 75 ரூபாய்க்கு மேலும் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்து விட்ட நிலையிலும், வீழ்ச்சி அடைந்து வரும் ரூபாயின் மதிப்பைச் சரி செய்வதற்கு மத்திய அரசு எவ்வித பொருளாதார நடவடிக்கைகளையும் எடுக்காமல் எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பதும்; பொதுப் போக்குவரத்து - பொருள் போக்குவரத்து - அத்தியாவசியப் பொருள்களின் விலை போன்ற பல்வேறு முனைகளிலும், பெட்ரோல் - டீசல் விலை உயர்வின் தாக்கத்தைக் குறைப்பதற்கு, அ.தி.மு.க அரசு விற்பனை வரியைக் குறைப்பது உள்ளிட்ட ஆக்கபூர்வமான நடவடிக்கை எதையும் எடுக்காமல் இருப்பதும் மிகவும் பொறுப்பற்ற செயலாகும்.


ஆகவே, பெட்ரோல் டீசல் விலையைக் கட்டுப்படுத்த எக்சைஸ் வரியைக் குறைத்திட மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், விற்பனை வரியைக் குறைத்து மக்களின் தலையில் சுமத்தப்பட்டுள்ள பெட்ரோல், டீசல் விலை உயர்வின் அழுத்தத்தைக் குறைத்திட அ.தி.மு.க அரசு முன் வர வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.


இங்கே உள்நாட்டில் எட்டாத உயரத்திற்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை உயர்த்திட அனுமதித்து விட்டு, மத்திய அரசு ஒரு லிட்டர் டீசலை 34 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் பெட்ரோலை 38 ரூபாய்க்கும் ஏற்றுமதி செய்வது என்ன வகை நியாயம்? அந்த முடிவு மிக மோசமான முரண்பாடு இல்லையா? அப்படிச் செய்து கொண்டிருப்பது, தேச நலனை வஞ்சிப்பதாகாதா? போன்ற கேள்விகள் இயல்பாகவே எழுகின்றன. எனவே, இவற்றுக்கெல்லாம் நாட்டு மக்களுக்கு வெளிப்படையாக விளக்கம் அளிக்க வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உண்டு என்பதையும் சுட்டிக்காட்டுகிறேன்!