குடும்ப முறை கலாச்சாரத்தை இன்றளவும் தமிழ்நாடு கடைபிடிப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பெருமிதம்..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை அடையாறில் உள்ள மத்திய தோல் ஆராய்ச்சி நிலையத்தில் ‘மிருதங்கத்தின் இசை சிறப்பு’ (Musical Excellence of Mridangam) என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு புத்தகத்தை வெளியிட, அதனை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பெற்றுக்கொண்டார். அப்போது, வெங்கையா நாயுடு, உலகில் நம்முடைய நாகரிகம் மிகவும் தொன்மையான நாகரிகம். நம் கலாச்சாரத்தையும், நாகரிகத்தையும் பாதுகாக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார். 


இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில்; மிருதங்கத்தில் இருந்து வெளிப்படும் அருமையான இசைக்கு மேற்கத்திய இசைக்கருவிகள் எதுவும் ஈடாகாது. நமது ஆன்மிக இலக்கியங்களிலும் சிவபெருமானின் தாண்டவ நடனத்துக்கு மிருதங்கம் வாசிக்கப்பட்டதாக குறிப்புகள் உள்ளன. மிருதங்கம் என்பது நமது மதம், வரலாறு மற்றும் கலாசாரத்தின் ஒரு அங்கமாகும். இந்தியாவின் இசையில் அற்புதமான ஆழம், பரவலான ஞானம், ஈர்ப்புள்ள பன்முகத்தன்மை உள்ளது. நமது பழமையான இசை முறைமைகளின் ஒவ்வொரு பாடங்களும் பாதுகாக்கப்பட்டு, கற்பிக்கப்பட வேண்டும். 


ஒன்றுபட்ட பாரதம், ஒப்பிலா பாரதம் என்ற நமது லட்சியத்தை அடைவதில் கலாசாரம் மற்றும் பழமையான இசையின் பன்முகத்தன்மையை கூட்டாக செழுமைப்படுத்த வேண்டும். தமிழ்நாடு இல்லாமல் இந்தியா இல்லை. இந்தியாவின் ஒரு பகுதிதான் தமிழ்நாடு. தமிழர் என்பதிலும் இந்தியர் என்பதிலும் பெருமிதம் கொள்ள வேண்டும். குடும்ப முறை, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை தமிழ்நாடு தொடர்ந்து பின்பற்றி வருவது மகிழ்ச்சியளிக்கிறது. மன அழுத்ததில் இருந்து விடுபட இசையே சிறந்த மருந்து என்று பெருமையுடன் தெரிவித்துள்ளார்.