புதிய கண்டுபிடிப்புகளும், புதுமையான தொழில்களைத் தொடங்க வழிவகுப்பதும் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான அடிப்படை அம்சம்! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மும்பை ஐஐடியின் 56 ஆவது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அப்போது மாணவர்களிடையே உரையாற்றிய பிரதமர் கூறுகையில், இந்தியாவை பல வகையிலும் மேம்படுத்துவதற்கான புதிய கண்டுபிடிப்புகளை மாணவர்கள் நிகழ்த்த வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். பருவநிலை மாற்றத்தை எதிர்கொண்டு விவசாய உற்பத்தியை பெருக்குவதற்கான அவசியம் இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.


மாற்று எரிசக்தி, தூய்மையான தண்ணீர், உணவுப் பொருள்கள் வீணாவதைத் தடுத்து ஊட்டச்சத்து குறைபாட்டுப் பிரச்சினைக்கு தீர்வு காணுதல் என மனிதர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளை இளைஞர்கள் நிகழ்த்த வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.


புதுமை என்பது இன்றைய உலகத்தின் குறியீட்டுச் சொல்லாக உருவெடுத்திருப்பதைச் சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, புதுமைகளைக் கண்டுபிடிக்காத சமூகம் தேக்கநிலையை அடைந்து விடும் எனவும் தெரிவித்தார். புதுமையான தொழில்களைத் தொடங்குவதற்கான மையமாக இந்தியா வளர்ந்து வருவதாகவும், அதன் மூலம், புதிய கண்டுபிடிப்புகளின் மீது கொண்டுள்ள தாகம் வெளிப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.



புதிய கண்டுபிடிப்புகளும், புதுமையான தொழில்களைத் தொடங்க வழிவகுப்பதும் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான அடிப்படை அம்சங்களாகும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதையடுத்து ஐஐடி கல்வி நிறுவன வளாகத்தில் எரிசக்தி அறிவியல், பொறியியல் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் மையம் ஆகியவற்றுக்கான புதிய கட்டடங்களை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.