ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வருகின்ற 21-ம் தேதி நடைபெற இருக்கின்ற நிலையில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் திமுக, அதிமுக, டிடிவி தினகரன் உள்ளிட்ட அனைவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதையடுத்து, பணப்பட்டுவாடா காரணமாக கடந்த முறை தேர்தல் ரத்து செய்யப்பட்டதை போல், இந்த முறையும் ரத்தாகிவிடக் கூடாது என்ற நோக்கத்தில், தேர்தல் விதிமுறைகளை யாரும் மீறாத வண்ணமும் தேர்தல் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 


இந்நிலையில் சென்னை புதுவண்ணாரப் பேட்டையில் இன்று வாக்கு இயந்திரங்களில் வேட்பாளர் பெயர், சின்னம், புகைப்படம் பொருத்தும் பணியை மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன், காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் ஆகியோர் தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.


பின்னர் பேசிய கார்த்திகேயன், தேர்தலுக்காக துணை ராணுவப் படையினரின் 15 கம்பெனிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். ஆர்.கே.நகர் தொகுதியில் 85 இடங்களில் அதிநவீனமான 225 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், அதில் பணப்பட்டுவாடா, பொருட்கள் வழங்குவது போன்ற காட்சிகள் இதுவரை பதியவில்லை எனவும் கூறினார். 


மேலும், 107 குழுக்கள் இணைந்து ஆர்.கே நகரில் வாகன சோதனையில் ஈடுபட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.