லுக் அவுட் நோட்டிஸ்: ப.சிதம்பரத்தை தேடப்படும் நபராக அறிவித்து அமலாக்கத்துறை
அமலாக்கத்துறையினர் ப.சிதம்பரத்தை தேடப்படும் நபராக அறிவித்து லுக் அவுட் நோட்டிஸ் அனுப்பியுள்ளது.
புதுடெல்லி: பல முறை ப.சிதம்பரம் இல்லத்திற்கு சென்றும், அவர் அங்கு இல்லாத காரணத்தால் ஏமாற்றத்துடன் திரும்பிய, அமலாக்கத்துறையினர் ப.சிதம்பரத்தை தேடப்படும் நபராக அறிவித்து லுக் அவுட் நோட்டிஸ் அனுப்பியுள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் வழங்க மறுத்த டெல்லி உயர் நீதிமன்றம், அவருடைய மனுவை நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து ப.சிதம்பரம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனக்கோரிக்கை வைத்தது. ஆனால் உச்ச நீதிமன்றம் இதை அவசர வழக்காக விசாரிக்க முடியாது எனக்கூறியது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு தயாரான சிபிஐ அதிகாரிகள், நேற்று மாலை முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டிற்கு சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவர் இல்லை. மேலும் அவரது செல்போனும் அணைத்து வைக்கப்பட்டிருந்ததால் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் 2 மணி நேரத்திற்குள் விசாரணைக்கு ஆஜராகும்படி ப.சிதம்பரம் வீட்டு கதவில் நோட்டீஸ் ஒட்டிவிட்டு அதிகாரிகள் திரும்பி சென்றனர்.
இன்று காலை மீண்டும் ப. சிதம்பரம் இல்லத்திற்கு 6 பேர் கொண்ட சி.பி.ஐ. அதிகாரிகள் அடங்கிய குழு சென்றது. ஆனால் ப.சிதம்பரம் அவரது இல்லத்தில் இல்லாத காரணத்தால் மீண்டும் ஏமாற்றத்துடன் திரும்பினர். இதனால் ப.சிதம்பரத்தை தேடப்படும் நபராக அறிவித்து அமலாக்கத்துறை லுக் அவுட் நோட்டிஸ் அனுப்பியுள்ளது.
இந்தநிலையில், முன்ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று சுப்ரீம்கோர்ட்டில் வந்தது. ஆனால் இந்த வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா மறுப்பு தெரிவித்தார். மேலும் தலைமை நீதிபதியிடம் முறையிடுமாறு கோரினார். இதனையடுத்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்விடம் ப.சிதம்பரம் சார்பில் முறையிடப்பட்டது. ஆனால் அயோத்தி வழக்கை விசாரித்து வரும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, அவசரமாக விசாரிக்க முடியாது என்று மறுப்பு தெரிவித்தது.
ஐ.என்.எக்ஸ் வழக்கில் மேல்முறையீட்டு மனு விசாரணைக்காக காத்திருக்கும் நிலையில், சி.பி.ஐ. தரப்பு நியாயங்களை கேட்காமல், உச்ச நீதிமன்றம் எந்த ஒரு உத்தரவையும் பிறப்பிக்க கூடாது என்று கேவியட் மனுவை தாக்கல் செய்திருக்கிறது இந்திய புலனாய்வு துறை.