பிரதம மந்திரி குடியிருப்பு திட்ட வீடுகள் வழங்கியதில் முறைகேடுகள்: உயர் நீதி மன்றத்தில் வழக்கு
விருத்தாசலம் அருகே பிரதம மந்திரி குடியிருப்பு திட்ட வீடுகள் வழங்கியதில், முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே பாலக்கொல்லை ஊராட்சியில் 2021-22 ஆம் ஆண்டுகான பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டத்தில் முறைகேடான வகையில், பணம் பெற்றுக் கொண்டு, இறந்தவர்கள் பெயரில் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இறந்தவர்கள் பெயரில் ஆள் மாறாட்டம் செய்து பணம் கையாடல் செய்யப்பட்டுள்ளதாகவும், களர்குப்பம் கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து என்பவர் பாலக்கொல்லை ஊராட்சி மன்ற தலைவர் கவிதா மணிவண்ணன் மற்றும் ஊராட்சி செயலாளர் குப்புசாமி ஆகியோர் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள பொதுநல வழக்கு புகார் மனுவில், 'கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை அடுத்த ஆலடி அருகிலுள்ள கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பாலக்கொல்லை ஊராட்சியின் தலைவராக இருப்பவர் கவிதா மணிவண்ணன். இவரும் ஊராட்சி செயலாளர் குப்புசாமியும், இணைந்து பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா என்னும் பிரதமர் குடியிருப்புத் திட்டத்தில், இறந்தவர்கள் பெயரில் வீடுகள் ஒதுக்கீடு செய்தும், ஆள் மாறாட்டம் செய்தும், ஆதி திராவிடர் சமூகத்தை சேர்ந்தவர்களை, இதர பிற்படுத்தப்பட்டோர் பயனாளிகள் என பட்டியலில் சட்டவிரோதமாக சேர்த்து, இட ஒதுக்கீடு மாற்றியும், வீடு கட்டாமலேலே வீடு கட்டியதாகவும் என பல்வேறு முறைகேடுகள் செய்து அரசிடம் இருந்து சட்டவிரோதமாக, தொகை வழங்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக அரசு ஆவண பயனாளிகளின் பட்டியலின்படி, களர்குப்பம் கிராமத்தை சேர்ந்த இறந்த பயனாளிகளான கலியமூர்த்தி மற்றும் சாமிக்கண்ணு ஆகிய இருவர் பெயரில் வீடு வழங்கி, வீடு கட்டாமலேயே கட்டப்பட்டதாக சட்டவிரோதமாக அரசிடமிருந்து தொகை வழங்கப்பட்டுள்ளதாக வழக்கு தொடர்ந்த மாரிமுத்து தெரிவிக்கிறார்.
மேலும் பயனாளிகளின் பட்டியலில், பெயர் இல்லாத பாலக்கொல்லையை சேர்ந்த ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவரான சிவலிங்கம் என்பவரது மகன் நேரு, வீடு பெற வேண்டும் என்கிற நோக்கத்தில், ஆதிதிராவிடர் என்பதை மறைத்து, இதர பிற்படுத்தப்பட்டோர் பயனாளிகள் பட்டியிலில் பெயரை இணைத்து, நேருவுக்கு ஒரு வீடும், அவரது மகன் ராஜீவ்காந்திக்கு ஆதிதிராவிடர் பட்டியலில் ஒரு வீடும் என 2 இலவச வீடுகள் பெற்று, புதிதாக வீடு கட்டாமலேயே கட்டியதாக சட்டவிரோதமாக தொகை பெறப்பட்டுள்ளதாக மாரிமுத்து வழக்கு தொடர்ந்து உள்ளார்.
மேலும் படிக்க | சென்னை : மஜாஜ் பெயரில் பாலியல் தொழில்.. சட்டவிரோத ஸ்பாக்களுக்கு சீல்
இதேபோல் பாலக்கொல்லை நடேசன் மகன் தெய்வசிகாமணி, கிருஷ்ணன் மகன் மணிகண்டன், வெங்கடேசன் மனைவி கலைச்செல்வி, ராமன் மகன் சுந்தர் உள்ளிட்டோருக்கு வீடு கட்டாமலே கட்டியது போல் தொகை வழங்கப்பட்டுள்ளது' என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதேபோல் பாலக்கொல்லை ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த ராமலிங்கம் மகன் குமார் என்பவரது ஆவணங்களை பயன்படுத்தி, வீடு கட்டுவதற்கான அனுமதி ஆணை வழங்கிவிட்டு, பின்னர் அதே பெயரில் வேறு ஒருவருக்கு வீடு வழங்கி, ஆள்மாறாட்டம் செய்து, கட்டாத வீட்டுக்கு பணம் எடுக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட கம்மாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு கேட்டபோது, நான் வீட்டில் இருப்பதாக கூறி போனை துண்டிப்பு செய்தார். அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட பாலகொள்ளை ஊராட்சி மன்ற தலைவருக்கு தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு கேட்டபோது, எவ்வித முறைகேடுகள் நடைபெறவில்லை எனவும், வீடு ஒதுக்கப்பட்டது, பணம் வழங்கப்பட்டது என அனைத்தும் அரசு அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது எனவும், நான் ஒரு மேற்பார்வையாளர் தான் எனவும், நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதால், நாங்களும் உரிய ஆவணங்கள் சமர்ப்பித்து வழக்கு சந்திக்க உள்ளோம் என தெரிவித்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ