மற்றொரு எம்.எல்.ஏ., தினகரனுக்கு ஆதரவா?
திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ., இன்று தினகரனை நேரில் சந்தித்த்து அவருக்கு ஆதரவு தெரிவித்ததாக தகவல் வெளியானது. ஆனால், இதனை மறுத்த அவர், சசிகலாவை சந்தித்த பின்னர், நாளை தனது முடிவை அறிவிப்பேன் என்றார்.
ஓ.பி.எஸ்., துணை முதல்வர் ஆக்கப்பட்டதை தொடர்ந்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 19 பேர் கவர்னரை சந்தித்து முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என கடிதம் வழங்கினர் தொடர்ந்து 18 பேர் புதுச்சேரியில் உள்ள தனியார் ரிசார்ட்டில் தங்கியுள்ளனர்.
இந்நிலையில் இன்று திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ., ஏகே. போஸ், தேனியில் தினகரனை சந்தித்து பேசினார். பின்னர் கூறுகையில்:-
ஓ.பன்னீர்செல்வத்தை எனக்கு பிடிக்காது. அவர் இருக்கும் அணிக்கு நான் வர மாட்டேன். அவரை நீக்கினால், எங்களது முடிவை மறுபரிசீலனை செய்வோம். தினகரனை கட்சியில் நீக்குவதாக அறிவித்தது வருத்தமளிக்கிறது. சசிகலா தான் பொது செயலர். சசிகலா இல்லாமல் கட்சி, ஆட்சியை நடத்த முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
இதனையடுத்து அவர் தினகரனுக்கு ஆதரவு தெரிவித்ததாகவும் தகவல் வெளியானது. ஆனால், அடுத்த அரை மணி நேரத்தில் போஸ் இதனை மறுத்தார். தற்போது வரை தான் முதல்வர் எடப்பாடி அணியில் தான் உள்ளேன். திங்கட்கிழமை சசிகலாவை சந்தித்த பின்னர் தான் எனது முடிவை அறிவிப்பேன் என கூறினார்.