பஸ் கட்டண உயர்வை திரும்ப பெறுவதா? `சாத்தியமே இல்லை`: அமைச்சர்
பஸ் கட்டண உயர்வை மக்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும். இதை திரும்பே பெற முடியாது அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.
போக்குவரத்து கட்டண உயர்வை கண்டித்து மக்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து, நிதிச்சுமை காரணமாக உயர்த்தப்பட்டுள்ள பேருந்து கட்டண உயர்வை மக்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
கரூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், ஊதிய உயர்வு உள்ளிட்ட காரணங்களால் போக்குவரத்துக் கழகத்துக்கு செலவு அதிகமாகியுள்ளது. தவிர்க்க முடியாத நிலையில்தான் போக்குவரத்துக் கழகங்கள் பேருந்து கட்டணத்தை உயர்த்தியுள்ளன. 13வது ஊதிய குழுவுக்கு முன்பே நாள் ஒன்றுக்கு போக்குவரத்துக் கழகங்களுக்கு ரூ.9 கோடி நட்டம் ஏற்பட்டது. ஊதிய உயர்வுக்குப் பிறகு நாள் ஒன்றுக்கு ரூ.12 கோடி நட்டம் ஏற்படுகிறது.
2011-க்கு பின்னர் தற்போதுதான் கட்டணம் உயர்த்தப்படுகிறது. கடுமையான டீசல் விலையேற்றம், ஊழியர்களின் ஊதிய உயர்வு, பேருந்து உதிரி பாகங்களின் விலை உயர்வு போன்ற நிதி நெருக்கடியினால் கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இந்த விலை உயர்வுக்குப் பிறகும் கூட, மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் அரசு பேருந்து கட்டணம் குறைவாக உள்ள மாநிலம் தமிழகம் தான். பேருந்து கட்டணத்தை உயர்த்திய பிறகும் அண்டுக்கு ரூ.900 கோடி கோடி நிதிப் பற்றாக்குறை ஏற்படும். மக்கள் நலன் காக்கும் அதிமுக அரசின் இந்த கட்டண உயர்வை பொதுமக்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.
அதே சமயம், உயர்த்தப்பட்ட கட்டண உயர்வை திரும்பப் பெற வாய்ப்பில்லை என்றும், அரசுப் போக்குவரத்துக் கழகத்தை லாபத்துடன் இயக்க பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வலியுறுத்தியுள்ளனர். அவர்களின் கருத்துக்களை அரசு பரிசீலித்து ஏற்றுக் கொள்ளும் என்றும் கூறியுள்ளார்.