தண்ணீர் பஞ்சத்தை சமாளிக்க IT நிறுவனங்கள் எடுத்த அதிரடி முடிவு!
சென்னையில் தண்ணீர் பஞ்சத்தை சமாளிக்க, IT நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை வீட்டிலிருந்தபடியே பணியை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது!!
சென்னையில் தண்ணீர் பஞ்சத்தை சமாளிக்க, IT நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை வீட்டிலிருந்தபடியே பணியை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது!!
சென்னையில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், நகரவாசிகள் தண்ணீர் பஞ்சத்தை சமாளிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். சென்னை நகரம் கிட்டத்தட்ட 200 நாட்கள் வானம் பார்த்த பூமியாக இருப்பதாலும், வெயில் சுட்டெரிப்பதாலும் நீர் நிலைகள் வறண்டுவிட்டன. நிலைமை இப்படியிருக்க பெரும்பாலான IT நிறுவனங்கள் தண்ணீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள முடியாமல் திணறி வருகின்றன.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள 12 IT நிறுவனங்கள், குடிநீர் பிரச்னையை எதிர்கொள்ள, தங்களிடம் பணியாற்றும் ஐந்தாயிரம் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணியாற்றும்படி அறிவுறுத்தியுள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் மேற்கொண்டபோது, இதேபோன்ற ஒரு முடிவை IT நிறுவனங்கள் எடுத்திருந்த நிலையில், தற்போது மீண்டும் அதே உத்தியை கையில் எடுத்துள்ளன.
சில நிறுவனங்களோ அலுவலகத்திற்கு வரும் ஊழியர்கள் கட்டாயம் குடிநீர் கொண்டுவர வேண்டும் என்றும், தண்ணீரை மிகவும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று அறிவுரை வழங்கி வருகின்றன. சென்னை OMR பகுதிக்கு நாள் ஒன்றுக்கு மூன்று கோடி லிட்டர் தண்ணீர் தேவை என்ற நிலையில், அங்குள்ள 600 IT நிறுவனங்களில் பணியாற்றும் மூன்று லட்சத்து 20 ஆயிரம் ஊழியர்கள், இரண்டு கோடி லிட்டர் தண்ணீரை அனைத்துவித பயன்பாட்டுக்கும் பயன்படுத்தி வருகின்றனர். இதில் 60 சதவிகிம் நீரை IT நிறுவனங்களும், எஞ்சியுள்ளதை மற்ற நிறுவனங்களும் பயன்படுத்தி வருகின்றன.
சிறுசேரி சிப்காட் IT பார்க்கில் உள்ள 46 நிறுவனங்கள் 17 கிணறுகள் மூலம் நாள் ஒன்றுக்கு 20 லட்சம் லிட்டர் தண்ணீரை பயன்படுத்தி வந்தநிலையில், தற்போதைய நிலையில், பத்து லட்சம் லிட்டர் தண்ணீரை கிடைப்பதாக தெரிவித்துள்ளன. எஞ்சியுள்ள தண்ணீர் தேவையை டேங்கர் லாரிகள் பூர்த்தி செய்து வருவதாக கூறியுள்ளன. தண்ணீர் தட்டுப்பாடு தலைவலியை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஒவ்வொரு நாளும் கயிறு மேல் நடப்பது போன்று கழிவதாக IT நிறுவனங்கள் உள்பட பல்வேறு நிறுவனங்கள் தலைமைச் செயல் அதிகாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில், சில நிறுவனங்கள் தண்ணீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்தவும், நீர் மேலாண்மை கொள்கைகளை கடைபிடிக்கவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகள் அனைத்துமே தண்ணீர் இன்றி காணப்படுவதால் மக்கள் அன்றாட குடிநீருக்கே அவதிப்படும் நிலை நிலவி வருகிறது. இதே நிலை தொடர்ந்தால், கேன் தண்ணீருக்கும் தட்டுப்பாடு அபாயம் ஏற்படும் என அச்சம் உருவாகியுள்ளது.