தலைமைச்செயலாளர் வீட்டில் ரெய்டு: மம்தா கண்டனம்
தமிழக தலைமைச்செயலாளர் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டு வருவதற்கு மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் தமிழக தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவ் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து தமிழக அரசு உயர் அதிகாரிகள் மட்டத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. தலைமை செயலாளர் பதவி என்பது அரசு நிர்வாகத்தில் மிகவும் உயரிய பதவியாகும். இதுபோன்று உயர் பதவிகளில் இருப்பவர்களின் வீடுகளில் சோதனை நடத்துவது எளிதல்ல.
இது போன்ற ஒரு சூழ்நிலையில் தமிழக அரசின் தலைமை செயலாளரான ராமமோகன ராவின் வீட்டில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தி வருவது நாடு தழுவிய அளவில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
இதைக்குறித்து குறித்து மம்தா பானர்ஜி தனது சமுக வலைத்தளமான டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:-
இதே போல டெல்லி தலைமைச்செயலாளர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. தற்போது தமிழக தலைமைச்செயலாளர் வீட்டிலும் சோதனை நடத்தப்படுவதாக கேள்விப்பட்டேன். நியாயமற்ற மற்றும் சட்டத்திற்கு புறம்பான இந்த நடவடிக்கை ஏன் எடுக்கப்பட்டது? கூட்டாட்சி அமைப்பை சீர்குலைக்க சோதனை நடத்தப்படுகிறதா? பணத்தை குவித்து வரும் அமித்ஷா வீட்டில் ஏன் அவர்கள் சோதனை நடத்தவில்லை என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.