அதிமுக-வுடன் இணைந்து செயல்பட விரும்புவதாக சேலத்தில் ஜெ.தீபா தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையை தொண்டர்களின் விருப்பத்தின்படி அதிமுக-வுடன் இணைக்க முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெ. தீபா அறிவித்துள்ளார். மேலும் வரும் திருவாரூர் இடைத்தேர்தலில் ஆளும் அதிமுக அரசுடன் இணைந்து செயல்பட விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் பொதுக்குழு கூட்டம் இன்று சேலத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய தீபா அவர்கள்.,  அதிமுக மாபெரும் இயக்கம், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து கட்சியை வளர்த்துள்ளனர். ஜெயலலிதா மரணத்திற்கு சசிகலா தான் காரணம், அதன் காரணமாகவே தமிழக மக்கள் அவர்களை விரட்டி ஒதுக்கி வைத்துள்ளனர் என குறிப்பிட்டார். 


மேலும், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி கமிஷன் முழுமையாக உண்மையை வெளியே கொண்டு வரவேண்டும் எனவும் வலியுறுத்தினார். 


தொடர்ந்து பேசிய அவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொண்டர்களின் ஆதரவுடன் ஒரு சிறிய இயக்கத்தை நடத்தி வந்ததாகவும், ஆதரவு அளித்த தொண்டர்களுக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார். 


தினகரனை தீய சக்தி என விமர்சித்த தீபா., அதிமுக தான் தங்களது நிழல் என்றும் நூற்றாண்டுகாலம் கட்சி இருக்கவேண்டும் எனவும் குறிப்பிட்டார். இதற்கிடையில் அதிமுக-வுடன் பேரவையை இணைக்க மாவட்ட செயலாளர்களை கலந்து ஆலோசிக்காமல் முடிவெடுத்ததாக கூறி, சில தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 


இக்கூட்டத்தில் தீபா-வின் கணவரும், எம்.ஜி.ஆர், ஜெ.ஜெ.திமுக தலைவருமான கா.மகாதேவன் அவர்களும் உடன் இருந்தது குறிப்பிடத்தக்கது.