ஜல்லிக்கட்டு: நிரந்தர தீர்வு காணும் வரை போராட்டம்
ஜல்லிக்கட்டு நடைபெற அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டபோதும் அதனை ஏற்க போராட்ட களத்தில் இருக்கும் மாணவர்கள், இளைஞர் கூட்டமும் மறுத்துவிட்டது.
ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு காணும் வரை தமிழகம் முழுவதும் போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி சென்னை மெரினாவில் கடந்த திங்கட் கிழமை முதல் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து டெல்லி சென்ற முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஜல்லிக்கட்டு நடத்த அவசரச்சட்டம் இயற்றும் நடவடிக்கைகளில் இறங்கினார்.
இதையடுத்து குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் நேற்று ஜல்லிக்கட்டுக்கான அவசரச்சட்டம் இயற்றப்பட்டது. இதனை ஏற்க மறுத்த இளைஞர்கள் ஜல்லிக்கட்டுப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளனர். நிரந்தர திர்வு வரும் வரை போராட்டத்தை கைவிடப்போவதுதில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் சென்னை மெரினாவில் நடந்து வரும் போராட்டம் இன்று 6-வது நாளாக நீடிக்கிறது. அதேநேரத்தில் இன்று ஞாயிற்றுக் கிழமை விடுமுறை என்பதால் மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஏராளமானோர் மெரினாவில் குவிந்து வருகின்றனர்.