தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்த காரணமாக மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம் நடத்தி தமிழகத்துக்கு அவசரம் சட்டம் கொண்டு வரப்பட்டு தற்போது நிரந்தர சட்டம் கொண்டுவரப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மதுரை மாவட்டம், அவனியாபுரத்தில் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை நாளில் நடை பெறுவது வழக்கம். அதன் பிறகே பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறும். தடை விலகிய பிறகு இந்த ஜல்லிக்கட்டை நடத்த தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 


இதில் இன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. காலை போட்டி கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.


இதற்காக காளைகளும், மாடுபிடி வீரர்களும், அங்கு குவிந்து கடந்த 2 நாட்களாக பதிவு செய்தனர். பதிவு செய்யப்பட்ட காளைகளுக்கும், காளையர்களுக்கும் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. 


போட்டி நாளான இன்று 1008 மாடு பிடி வீரர்கள் பங்கேற்றதில், 263 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். அவர்களுக்கு போட்டிக்கான சீருடையான மஞ்சள் கலர் பனியனும், பச்சை கலர் அரை டிராயரும் வழங்கப்பட்டு, ஜல்லிக்கட்டு திடலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். 


இதே போல் காளைகளுக்கும் இறுதிக்கட்ட சோதனை நடத்தப்பட்டன. தொடர்ந்து 916 காளைகள் தகுதி பெற்று டோக்கன் வழங்கப்பட்டது. பின்னர் அவை அனைத்தும், ஒதுக்கப்பட்ட எண் வரிசைப்படி, வாடிவாசல் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டன.


இந்நிலையில் காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் முறைப்படி கொடிய சைத்து தொடங்கி வைத்தார். முதலில் கோவில் காளை வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடப்பட்டது. 


அதன் பிறகு, வாடிவாசல் வழியாக ஜல்லிக்கட்டு காளைகள் சீறிப்பாய்ந்து வருகிறது. அவற்றை பிடிக்க மாடுபிடி வீரர்கள் முயற்சி செய்து வருகிறார்கள். 


மாடுபிடி வீரர்கள் உற்சாகமாக காளைகளை அடக்கியும் வருகிறார்கள். காளைகளின் திமிலை பிடித்தே அடக்க வேண்டும். 2 ஆண்டுகளுக்கு பிறகு ஜல்லிக்கட்டு நடப்பதால், இதனை காண ஏராளமானோர் ஆர்வத்துடன் வந்து குவிந்து உள்ளனர். 


வாடிவாசல் வழியாக வரும் சில காளைகள், களத்தில் நின்று அங்கும், இங்கும் திரும்பி வீரர்களை விரட்டவும் செய்கிறது.


போட்டியை முன்னிட்டு, அவனியாபுரம் பகுதியில் தற்காலிக மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளன. மருத்துவ சிகிச்சை அளிக்க மருத்துவர்கள், செவிலியர்கள் தயார் நிலையில் உள்ளனர். 20 ஆம்புலன்ஸ்கள், 2 கால்நடை ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். பாதுகாப்பு உள்பட பல்வேறு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டு உள்ளது.