சென்னை: ஜல்லிக்கட்டு நடைபெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சுமார் 2000 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் அங்கேயே தங்கி போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளவர்கள் பீட்டாவிற்கு எதிராக தொடர் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.


அலங்காநல்லூரில் தொடங்கிய இந்த போராட்டம் மாநிலம் முழுவதும் பரவியது. குறிப்பாக சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மட்டுமே தொடங்கிய போராட்டமானது பெரிய புரட்சியாக தற்போது உருமாறியுள்ளது. 


பல்வேறு இடங்களில் இருந்து கட்டுக்கடங்காத கூட்டம் மெரினாவை நோக்கி வந்து கொண்டே இருக்கிறார்கள். இளைஞர்கள் மட்டுமல்லாமல் பெண்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் என பல்வேறு தரப்பினரும் மெரினாவில் குவிந்து வருகின்றனர்.


நேற்று மாலை நிலவரப்படி மெரினாவில் சுமார் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கூடி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 


மதுரை அலங்காநல்லூரிலும் 4-வது நாளாக போராட்டம் வலுவாக நடைபெற்று வருகிறது. 


தமிழக அரசு சார்பில் முதல்வர் பன்னீர் செல்வம் ஜல்லிக்கட்டு தொடர்பாக இன்று காலை 10.30 மணியளவில் பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார். இதற்காக நேற்று அவர் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார்.


தமிழக முதல்வர் மற்றும் பிரதமர் மோடி சந்திப்புக்கு பின்னர் வெளியாக செய்தியை பொறுத்தே அடுத்தக்கட்ட முடிவு இருக்கும் என்று போராட்டக் குழுவினர் தெரிவித்து உள்ளனர். 


மாணவர்கள் மற்றும் இளைஞர்களை தொடர்ந்து பல்வேறு அமைப்புகள் ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆதரவாக களத்தில் குதித்துள்ளனர். ஆசிரியர்கள், லாரி உரிமையாளர்கள் என பலரும் இன்று முதல் தங்களது ஆதரவு போராட்டத்தை தொடங்குகின்றனர்.