சென்னை: ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் இரவு பகலாக போராடி வருகிறார்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை நடத்தி விட்டு டெல்லி சென்றார். நேற்று காலையில் அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, இது தொடர்பாக ஓரு மனுவை கொடுத்து ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் இயற்றும்படி கோரிக்கை விடுத்தார். 


பின்னர் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கைகளை விரைவில் காண்பீர்கள் என கூறினார். எனவே, தமிழக அரசின் நடவடிக்கைக்காக போராட்டக்குழுவினர் தொடர் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். 


சுப்ரீம் கோர்ட்டு சட்டநிபுணர்களுடன் ஜல்லிக்கட்டு தொடர்பாக மிகத்தீவிரமாக ஆலோசனை நடத்தினார். 


எனவே, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் பிறப்பிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் ஓரிரு நாட்களில் ஜல்லிக்கட்டு நடத்த வழிவகை செய்யப்படும் என்று கூறிய முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இதற்காக குடியரசுத் தலைவர், ஆளுநர் ஒப்புதல் பெறப்பட்டு அவசர சட்டம் பிறப்பிக்கப்படும் என்றும் உறுதி அளித்தார். சட்டவரைவு உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், தமிழக அரசின் உயர்அதிகாரிகள் இதற்கான பணிகளை விரைந்து செய்வதாக முதல்வர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.


இந்நிலையில், முதலமைச்சர் டெல்லியில் இருந்து திரும்பியதும் தமிழக அமைச்சரவை இன்று அவசரமாக கூடுகிறது. இன்று மாலையில் நடக்கும் இந்த கூட்டத்திறகு முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்குகிறார்.