ஜல்லிக்கட்டு: விறுவிறுவென தயாராகி வரும் காளைகள்
சுப்ரீம் கோர்ட் தடையால் 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டி விளையாட்டு நடக்கவில்லை. இந்த ஆண்டும் சுப்ரீம் கோர்ட் தடையை நீக்க மறுத்ததால் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி அவனியாபுரத்தில் போராட்டம் நடைபெற்றது.
ஜனவரி 16-ம் தேதி அலங்காநல்லூரில் போராட்டம் நடைபெற்றது. விடிய விடிய போராட்டம் நடத்தியவர்கள் அதிகாலையில் கைது செய்யப்பட்டனர்.
இதனையடுத்து சென்னை மெரீனா தொடங்கி தமிழகம் முழுவதும் இந்த போராட்டம் வெடித்தது. மாணவர்கள், பொதுமக்கள் நடத்திய போராட்டம் ஒரு வாரமாக நடைபெற்றது. இதைத் தொடர்ந்து தமிழக அரசு அவசரச் சட்டம் நிறைவேற்றியது.
ஜனவரி 23-ம் தேதி பாலமேட்டிலும், 25-ம் தேதி அவனியாபுரத்திலும் ஜல்லிக்கட்டு நடத்த அரசு முயற்சி நடைபெற்றது. ஆனால் நிரந்தரச் சட்டம் கோரி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ரத்து செய்யப்பட்டது.
கடந்த 23-ம் தேதியன்று அலங்காநல்லூர் மட்டுமில்லாது தமிழகம் முழுவதுமே போலீசார் வலுக்கட்டாயமாக போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்தனர்.
இதைத் தொடர்ந்து அலங்காநல்லூரில் பிப்ரவரி 1-ம் தேதி பாலமேட்டில் பிப்ரவரி 2-ம் தேதி அவனியாபுரத்தில் பிப்ரவரி 5-ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்துவதாக அறிவித்து ஊர் கமிட்டி.
ஜல்லிக்கட்டு காளைகளுக்கு கடந்த 3 ஆண்டுகளாக போட்டியில் பங்கேற்கும் வகையில் எவ்வித பயிற்சியும் வழங்கப்படவில்லை. தற்போது போட்டி அறிவிக்கப்பட்டு உள்ளதால் காளைகளுக்கு முறைப்படி பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
அலங்காநல்லூர் போட்டியில் 550 காளைகள் பங்கேற்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. பாலமேட்டில் 500 காளைகளும், அவனியாபுரத்தில் 450 காளைகளும் பங்கேற்கின்றன.
மாடு பிடி வீரர்களும் தங்களை தயார்படுத்தி வருகிறார்கள். ஜல்லிக்கட்டில் 200-க்கு மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டு மாடு பிடிக்கிறார்கள்.
ஜல்லிக்கட்டு போட்டிக்கு இன்னும் சில தினங்களே உள்ளதால் அலங்காநல்லூர் வாடிவாசல் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
உலகம் முழுவதும் கவனத்தைப் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் இந்த ஆண்டு களைகட்ட தொடங்கி உள்ளது. பல சேட்டிலைட் சேனல்கள் இந்த போட்டிகளை நேரடியாக ஒளிபரப்பும் என்பதால் உலக அளவில் உள்ள தமிழக மக்கள் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளை கண்டு ரசிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.