தமிழர்களின் பாரம்பரியம் மிக்க ஜல்லிக்கட்டு விளையாட்டுப் போட்டிகளை நடத்த அனுமதி வழங்கக்கோரி அலங்காநல்லூரில் நேற்று காலை தொடங்கிய போராட்டம் இன்று காலை வரை நீடித்தது. போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள், பெண்கள் உள்பட 240 பேரை போலீசார் கைது செய்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அலங்காநல்லூரில் கிராம மக்கள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதேபோல் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்களும், மாணவர்களும் அணிதிரண்டு பேராட்டம் நடத்தி வருகின்றனர். புதுவையிலும் போராட்டம் நடைபெறுகிறது. ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமான பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என போராட்டக்காரர்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.


ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும் அலங்காநல்லூரில் இளைஞர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் சென்னை மெரினா கடற்கரை அருகே பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீஸ் அதிகாரிகள் தொடர்ந்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். 


3 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டக்காரர்கள் சமாதானம் அடையவில்லை. முதலமைச்சர் வந்து பேசும் வரையில் போராட்டம் தொடரும் என்று கூறிவிட்டனர். இதனால் போலீசாரும் வேறு வழியின்றி அப்பகுதியில் பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்தினர்.


இதற்கிடையே இன்று மாலையில் மெரினா கடற்கரை பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அப்போதும் கலைந்து செல்லாத இளைஞர்கள், தங்களிடம் உள்ள செல்போன் டார்ச் வெளிச்சத்தில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கடற்கரை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.