சென்னை: ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி தமிழகம் முழுவதும் இளைஞர்கள் நடத்திவரும் போராட்டம் இன்று 4வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு சுப்ரீம் கோர்ட் தடையால் இந்தாண்டு நடக்க முடியாமல் போனது. ஜல்லிக்கட்டிற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும் எந்த வித பலனும் ஏற்படவில்லை. 


இதையடுத்து அலங்காநல்லூரில் கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் கடந்த 15-ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் சென்னை மெரினா, கோவை, சேலம், நெல்லை என பரவி தற்போது தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் இளைஞர்கள் ஜல்லிக்கட்டிற்காக போராடி வருகின்றனர். 


போராட்டம் நடத்தும் இளைஞர்கள் சற்றும் தளர்ச்சியடையாமல் தொடர்ந்து 4-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இரவு பகல் பாராமல் விடிய விடிய நடந்து வரும் இப்போராட்டத்தின் போது ஜல்லிக்கட்டு தமிழர்களின் உரிமை எனவும், ஜல்லிக்கட்டிற்கான தடை என்பது நாட்டு மாட்டு இனங்களை அழிக்கும் செயல் எனவும், ஜல்லிக்கட்டு தடைக்கு முக்கிய காரணமான பீட்டா அமைப்பை தடை செய்யக் கோரியும் முழக்கமிட்டு வருகின்றனர்.


போராட்டத்தில் பெரும் அளவில் பெண்களும், குழந்தைகளும் கலந்து கொண்டு வருகின்றனர். குறிப்பாக சென்னை மெரினா மற்றும் மதுரை தமுக்கம் பகுதிகளில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள், பெண்கள் என பலர் குடும்பத்துடன் வந்து பேராட்டத்தில் பங்கெடுத்து வருகின்றனர். 


போராட்டம் தீவிரமடைந்துள்ளதால் நேற்று சில கல்லூரி நிர்வாகங்கள் தங்கள் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்திருந்தன. 


இந்நிலையில் இன்று தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்துள்ளது. 


இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் நடத்தி வரும் இந்த போராட்டத்திற்கு இன்று பல தரப்பு வணிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 


பல்வேறு பகுதிகளில் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதே போல் ஆட்டோ, கால் டாக்ஸி போன்ற வாகனங்கள் எதுவும் இன்று ஓடாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இளைஞர்கள் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும வகையில் அரசியல்கட்சிகளும் தங்கள் பங்கிற்கு போராட்டத்தை அறிவித்துள்ளனர். தி.மு.க., சார்பில் ரயில் மறியல் போராட்டம், த.மா.க., சார்பில் மனித சங்கிலி போராட்டம், இன்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ள பந்த் மற்றும் இளைஞர்கள் போராட்டத்திற்கு ம.ந.,கூட்டணி ஆதரவு என அரசியல் கட்சிகளும் நேரடியாக போராட்டக் களத்தில் இறங்கியுள்ளது.


லட்சக்கணக்கான இளைஞர்கள் ஒரே இடங்களில் கூடி போராட்டத்தில் ஈடுபட்டாலும் அவர்கள் தங்கள் போராட்டத்தில் கண்ணியத்தை காத்து வருகின்றனர். 


தங்கள் போராட்டத்தால் பொதுமக்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்பட்டு விட கூடாது என்பதில் தெளிவாக இருக்கின்றனர். எந்த வித அசம்பாவித சம்பவமும் நடைபெறவில்லை.