பெரியார், அண்ணாவுக்கு பதிலாக இன்பநிதிக்கு தான் திமுகவில் முக்கியத்துவம் - ஜெயக்குமார்
பெரியார், அண்ணா படங்களை எல்லாம் புறக்கணித்துவிட்டு, திமுக முப்பெரும் விழாக்களில் உதயநிதி, இன்பநிதிக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், " அரசு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேரன் இன்பநிதி கலந்து கொண்டது விதியை மீறிய செயல். திமுக குடும்ப நலனை முதன்மையாக வைத்து செயல்படுகிறது. கோவையில் செம்மொழி மாநாட்டிலும் தமிழ் அறிஞர்கள் பின்வரிசையில் தள்ளப்பட்டு, முன்வரிசையில் அப்போது முதலமைச்சரான கலைஞர் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் தான் இருந்தனர். தமிழ் அறிஞர்களை திமுக எப்போதும் மதித்ததில்லை.
திமுகவினர் முப்பெரும் விழா என கூறிவிட்டு பெரியார் அண்ணா ஆகியோரின் படங்களை பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது இத்தகைய படங்களை தவிர்த்துவிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உதயநிதி, இன்பநிதி ஆகியோர் படங்களை தான் முப்பெரும் விழா நிகழ்ச்சிக்கு பயன்படுத்துகின்றனர். ஓபிஎஸ் - டிடிவி ஆகியோர் பொழுதுபோக்குக்காக கொடநாடு விவகாரம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக சொல்லுகிறபடி அவர்கள் ஆடிக் கொண்டிருக்கிறார்கள்.
மேலும் படிக்க | நாடாளுமன்ற தேர்தல் வெற்றி! ஓபிஎஸ் - அமமுக தான் முடிவு செய்யும் - டிடிவி தினகரன்!
அதிமுகவை பொருத்தவரை மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை. எனவே யார் போராட்டம் நடத்தினாலும் அதைப்பற்றி தங்களுக்கு கவலை இல்லை. டிடிவி- ஓபிஎஸ் ஆகியோர் இணைந்து தேர்தலை சந்திப்பது என்பது மண் குதிரை போன்றது தான். எனவும் ஏற்கனவே அவருடன் கூட்டணி சேர்ந்தவர்கள் கரையேறாத நிலையில், டிடிவி ஓபிஎஸ் ஆகியோரின் கூட்டணி அச்சாணி இல்லாத வண்டியை போன்றது, அது மூன்று அடி கூட தாண்டாது. ஊழலை பற்றி பேச திமுகவிற்கு எந்த தகுதியும் இல்லை. சர்க்காரியா கமிஷன் முதல் கொண்டே சர்க்கரை ஊழல், வீராணம் ஏரி குழாய் ஊழல் என பல்வேறு ஊழல்களை செய்தது திமுக ஆட்சி தான்.
நாட்டிலேயே ஊழலுக்காக ஆட்சி கலைக்கப்பட்டதும் திமுக ஆட்சி தான். இத்தகைய ஊழல்களை எல்லாம் அறிக்கையாக தயார் செய்து அதனை ஆளுநரிடம் புகார் அளித்தவர் மறைந்த அதிமுக தலைவர் எம்ஜிஆர். அதிமுக ஊழலை வெளிக்கொண்டு வர தயங்காது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவரது கட்சியை வளர்ப்பதற்காக நடைபயணம் மேற்கொண்டுள்ளார். அதில் ஒன்று தவறு இல்லை. அதிமுக தலைவர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் செய்த நலத்திட்டங்களை அதிமுகவினர் தான் செய்ய முடியும். அவர்கள் செய்த சாதனையை பிறர் செய்ய முடியாது.
தமிழக அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முடிவுகள் குறித்து இலாக்கா இல்லாத அமைச்சராக இருக்கக்கூடிய செந்தில் பாலாஜிக்கு கோப்புகள் அனுப்ப வேண்டும். அப்படி அனுப்புகிறபட்சத்தில் சிறையில் அவர் இருப்பதால் செந்தில் பாலாஜிக்கு அனுப்பப்பட்ட கோப்புகளை பிறர் பார்வையிடகூடும். இது அரசின் ரகசியத்தை காக்க தவறிய செயல் என்பதால் 356-வது பிரிவு பயன்படுத்தி திமுக ஆட்சி கலைக்கப்பட கூடும்.
டாஸ்மார்க் மது விற்பனையை அதிகரிக்க அமைச்சர் முத்துசாமி ஆய்வு மேற்கொண்டு உள்ள நிலையில், செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்தபோது டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் வசூலிக்கப்பட்டது. தற்போது முத்துசாமி அமைச்சராக இருக்கும்போது பாட்டிலுக்கு 5 ரூபாய் வாங்கப்படுகிறது. 5 ரூபாய் முத்துசாமி என்ற பெயர் அவருக்கு தேவையா?.
அரசின் வருவாயை பெருக்குவதற்காக அமைக்கப்பட்ட பொருளாதார நிபுணர்கள் குழுவின் அறிக்கை எங்கே?. அதனை வெளியிட வேண்டும். சொத்து வரி, மின் கட்டண உயர்வு, பத்திரப்பதிவு உயர்வு என அனைத்து கட்டணங்களையும் உயர்த்தி மக்களிடமிருந்து பல்வேறு வகைகளில் வரியை வசூல் செய்து, அவர்களை மிகவும் பாதிப்படைய கூடிய செயலை திமுக அரசு செய்து வருகிறது" என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும், விமர்சனங்களையும் முன் வைத்தார்.
மேலும் படிக்க | அண்ணாமலை டீமில் இருந்து விழுந்த அடுத்த விக்கெட் - மவுனம் கலைத்த திருச்சி சூர்யா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ