சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் அதாவது பிப்ரவரி 24-ம் தேதி அரசியல் பயணம் குறித்த அடுத்த கட்ட முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஜெயகுமார் நிருபர்களிடம் கூறினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது தொடர்பாக இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த தீபா கூறியதாவது: 


ஜெயலலிதா தமிழக மக்களுக்காக உழைத்தவர். ஜெயலலிதாவை இழந்ததால் தமிழக மக்கள் தவிக்கின்றனர். 1971-ம் ஆண்டு அதிமுகவை உருவாக்கி மக்களாட்சியை உருவாக்கியவர் எம்.ஜி.ஆர்., அவரது மறைவுக்கு அந்த பணியை துவங்கி சாதனை படைத்தவர் ஜெயலலிதா அவர்கள். 


2 மாதங்களுக்கு மேலாக சிகிச்சை பெற்ற பலனின்றி மறைந்தார் என்பது தொண்டர்களுக்கும் மக்களுக்கும் அதிர்ச்சியாக உள்ளது. அதிர்ச்சியில் மக்கள் மீள்வதற்குள் அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டு விட்டன. 


நான் அரசியலுக்கு வர வேண்டும் என மக்கள விரும்புகின்றனர். நான் சாதாரணமான குடும்பத்தை சேர்ந்த பெண். இதழியல் படித்து பத்திரிகையாளராக பணியாற்றினேன். என்மீது நம்பிக்கை வைத்து அரசியலில் அழைத்ததற்கு நன்றி. 


தமிழக மக்களுக்காகவும், தொண்டர்களுக்காகவும் இனி வரும் காலத்தில் பணியாற்றுவேன். ஜெயலலிதாவின் நல்லாசியோடு எனது வாழ்க்கையை மக்களுக்கு அர்ப்பணித்து மக்கள் பணியை மேற்கொள்ள உள்ளேன்.


இன்று முதல் புதிய பயணத்தை துவங்க உள்ளேன். எம்ஜிஆரின் நுாற்றாண்டு பிறந்தநாளின் இன்று வாழ்க்கையின் புதிய அத்தியாத்தை துவங்க உள்ளேன். 


மக்கள் நலத்திட்டங்கள், மக்களுக்கான பணிகள் தொடர வேண்டும். ஜெயலலிதாவின் கனவை ஒன்று சேர்ந்து இன்று முதல் தமிழகத்தை ஆசியாவிலேயே சிறந்த மாநிலமாக்கும் நோக்கத்துடன் நற்பணிகளை மேற்கொள்வேன். 


இந்த நேரத்தில் எனது உரிமைகளையும் கடமைகளையும் நிலைநாட்டி  பேராதரவு அளித்த தொண்டர்களுக்கும் மக்களுக்கும் நன்றி. 


ஜெயலலிதா பிறந்த நாளன்று, அரசியலில் ஈடுபடுவது குறித்த அடுத்த கட்ட நடவடிக்கையை வெளியிட உள்ளேன். மக்களின் கருத்தையும், தொண்டர்களின் கருத்தையும் சேகரித்து விட்டு உரிய காலகட்டத்தில் அரசியல் பயணத்தை மேற்கொள்ளலாம் என நினைக்கிறேன். மக்களுக்காக பணியாற்ற காத்திருக்கிறேன். 


இவ்வாறு அவர் கூறினார்.