ஜெ., மரணத்தில் சி.பி.ஐ. விசாரணை வேண்டும்- பாராளுமன்றத்தில் வற்புறுத்தல்
தமிழக முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அதிமுக-வின் ஓ. பன்னீர்செல்வம் அணியினர் கூறி வருகின்றனர்.
அவரது மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து வரும் அவர்கள், இதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சமீபத்தில் உண்ணாவிரத போராட்டமும் நடத்தினர்.
அந்த அணியை சேர்ந்த எம்.பி.க்கள் நேற்று இந்த பிரச்சினையை பாராளுமன்றத்திலும் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதனால் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் அலுவல்கள் பாதிக்கப்பட்டது.
பாராளுமன்றம் காலையில் கூடியதும் ஓ. பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த சில எம்.பி.க்கள் எழுந்து ஜெயலலிதாவின் மரணத்துக்கு சி.பி.ஐ. விசாரணை தேவை என கோரிக்கை விடுத்தனர்.
இதற்கிடையே மேல் சபையிலும் இந்த பிரச்சினையை ஓ. பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த அதிமுக உறுப்பினர்கள் எழுப்பினர். ஜெயலலிதா மரணத்துக்கு மத்திய அரசு விசாரணை தேவை என்ற கோரிக்கையை வலியுறுத்தி வி.மைத்ரேயன் மற்றும் சசிகலா புஷ்பா உள்ளிட்ட எம்.பி.க்கள் அடிக்கடி சபையின் மையப்பகுதியை முற்றுகையிட்டவாறு இருந்தனர்.
இந்த பிரச்சினையை கேள்வி நேரம் முடிந்த பின்னர் எழுப்புமாறும், அப்போது கோரிக்கையை எழுப்ப அனுமதி அளிக்கப்படும் என்றும் மேல்-சபை துணைத்தலைவர் பி.ஜே.குரியன் தெரிவித்தார்.
அதன்படி கேள்வி நேரம் முடிந்ததும் இந்த பிரச்சினையை எழுப்பி பேசிய மைத்ரேயன், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் ஏராளமான சந்தேகங்கள் உள்ளன. எனவே இதில் உண்மை நிலவரம் அறிய சி.பி.ஐ., சிறப்பு புலனாய்வுக்குழு அல்லது நீதி விசாரணை இதில் ஏதாவது ஒன்றுக்கு மத்திய அரசு உடனடியாக உத்தரவிட வேண்டும் என்றார்.
அவர் பேசிக்கொண்டு இருந்த போது சசிகலா ஆதரவு அணியைச் சேர்ந்த அ.தி.மு.க. உறுப்பினர்கள் தொடர்ந்து எதிர்ப்பு கோஷமிட்டவாறு இருந்தனர்.