தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமூக சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு, மதநல்லிணக்கம், மொழித் தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, கலாச்சாரம், பத்திரிகை, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொண்டாற்றும் பெண்களை கௌரவப்படுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் இந்தத் துறைகளில் சிறப்புடன் பணியாற்றும் பெண்களில், ஒருவரை தேர்ந்தெடுத்து  அவருக்கு அந்த ஆண்டின் சர்வதேச மகளிர் தினத்தையட்டி “அவ்வையார் விருது” எனும் உயரிய விருது வழங்கப்படும் என்றும், இந்த விருது பெறுபவருக்கு ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம், 8 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம்,  சான்றிதழ்  மற்றும் பொன்னாடை ஆகியவை வழங்கப்படும் என்றும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். 


2016-ஆம் ஆண்டுக்கான அவ்வையார் விருதுக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டாக்டர் எம். சாரதா மேனனுக்கு அவரது சிறந்த சமூக சேவையினை பாராட்டி அவ்வையார் விருது வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசால் 2.3.2016 அன்று அறிவிக்கப்பட்டது.


அதன்படி, மனநல மருத்துவர் டாக்டர் சாரதா மேனனுக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று தலைமைச் செயலகத்தில் அவ்வையார் விருதுக்கான ஒரு லட்சம் ரூபாய் காசோலை,  8 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ் ஆகியவற்றை வழங்கி பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். அப்போது, முதல்- அமைச்சர் ஜெயலலிதா அவரை வாழ்த்தினார். அவ்வையார் விருதினை பெற்றுக் கொண்ட டாக்டர் சாரதா மேனன் தனது சமூக சேவையினை அங்கீகரித்து விருது வழங்கியமைக்காக தனது நெஞ்சார்ந்த நன்றியினை முதல்-அமைச்சருக்கு தெரிவித்துக் கொண்டார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.