சென்னை: ஜெயலலிதா படத்தை அரசு அகற்றாவிட்டால், கோர்ட்டிற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தலைமை செயலகத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதனை இன்று சந்தித்தார்.
 
பின்னர் அவர் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:-


ஜெயலலிதாவை தனிப்பட்ட முறையில் விமர்சிக்க விரும்பவில்லை. அவர் மறைந்த தலைவர். அவரை விமர்சனம் செய்வது அரசியல் நாகரீகத்திற்கு எதிரானது. 


ஆனால், அவரின் பிறந்த நாள் விழா மக்களின் வரிப்பணத்தில் கொண்டாடப்பட்டுள்ளது. கோர்ட்டால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டவர் ஜெயலலிதா. அவர் மறைந்துவிட்ட காரணத்தினால் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. முதல்வர் 69 லட்சம் மரக்கன்றுகள் நடும் விழாவை துவக்கி வைத்துள்ளார். இதில், அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். இது சட்டப்படி தவறு. நேர்மையான அதிகாரி என பெயரெடுத்துள்ள கிரிஜா வைத்தியநாதன் இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளார். இதனை நாங்கள் தட்டி கேட்காமல் இருக்க முடியாது. 


ஒரு தலைவர் பிறந்த நாளுக்காக கைதிகளை விடுதலை செய்தது போய், குற்றவாளியின் பிறந்த நாளில், பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடும்நிலை உருவாகி உள்ளது. முதல்வர் பழனிசாமியும் பதவிப்பிரமாணத்திற்கு எதிராக செயல்பட்டுள்ளார். 


தலைமை செயலகம், அமைச்சர்கள் அறை, உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள ஜெயலலிதா படம் வைக்கப்பட்டுள்ளது. இதனை உடனடியாக அகற்ற வேண்டும். தவறினால், நாங்கள் கோர்ட்டிற்கு செல்லும் நிலை ஏற்படும். குற்றவாளி ஜெயலலிதா படத்தை அகற்ற வேண்டும் என பொது மக்களும்வலியுறுத்துகின்றனர். 


இவ்வாறு அவர் கூறினார்.