ஜெயலலிதா மரணம்: தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
4 வாரங்களுக்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் பிப்ரவரி மாதம் 23-ம் தேதி வழக்கை ஒத்திவைத்துள்ளது.
இது தொடர்பாக சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த பி.ஏ.ஜோசப் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அவசர மனுவில் கூறியிருப்பதாவது:
நான் அதிமுக தொண்டன். தற்போதும் அடிப்படை உறுப்பினர். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் பல சந்தேகங்கள் உள்ளன. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த 4 மாதங்களில் உடல் நலம் பாதிக்கப்பட்டு அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார்.
ஜெயலலிதா உடல்நலம் முன்னேற்றமடைந்து வருவதாக மருத்துவமனை நிர்வாகமும் அறிக்கை மூலம் கூறி வந்தது. இதற்கிடையே ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்த வதந்தியை பரப்பியதாக 43 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். எல்லா தகவல்களும் ஜெயலலிதா நன்றாக உள்ளார். விரைவில் வீடுதிரும்புவார் என்றே கூறி வந்தன. இதை உறுதி செய்யும் விதமாக பிரதாப் சி.ரெட்டியும் ஜெயலலிதாவின் உறுப்புகள் சரியாக செயல்படுகின்றன. இதனால் அவர் அவசர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்படுவதாக கூறினார்.
இந்நிலையில் திடீரென டிசம்பர் 4-ம் தேதி ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக எய்ம்ஸ் மருத்துவர்கள், அவர் நன்றாக இருப்பதாக பேட்டி அளித்தனர். டிசம்பர் 5-ம் தேதி மாலை ஜெயலலிதா இறந்து விட்டதாகக் கூறுவது உண்மைக்குப் புறம்பானது என அப்போலோ மருத்துவமனை நிர்வாகமும் அறிக்கை வெளியிட்டது. ஆனால் அன்றிரவு 11.30 மணிக்கு அவர் இறந்து விட்டார் என மற்றொரு அறிக்கை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதில் ஏராளமான குளறுபடிகள் உள்ளனமுன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் என்னைப் போன்ற சாதாரண மக்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளது.ஜெயலலிதாவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட போது அவருடைய கால்கள் அகற்றப்பட்டுள்ளது, அவரது உடல் பதப்படுத்தப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது. பொதுவாக இறந்து அதிக நாட்களான உடலுக்குத் தான் இதுபோன்ற பதப்படுத்தும் பணிகள் செய்வது வழக்கம்.
டிசம்பர் 5-ம் தேதி இரவு இறந்த அவரது உடல் மறுநாளே அடக்கம் செய்யப்பட்டபோது எதற்காக பதப்படுத்த வேண்டும்? எதற்காக இறப்பதை அறிவிக்கும் முன்பாக முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் பதவியேற்க வேண்டும்? அரவக்குறிச்சி உள்ளி்ட்ட 3 தொகுதி தேர்தலுக்கு கைரேகை பெறும்போது அவர் சுயநினைவோடு தான் இருந்தாரா? என அவரது மரணத்தில் அடுக்கடுக்கான சந்தேகங்கள் எழுந்துள்ளன.ஏற்கெனவே, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மரணம் குறித்த வழக்கில் ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைத்து கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதுபோல மிகப்பெரிய மக்கள் தலைவரான ஜெயலலிதாவின் மரணத்திலும் பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. எனவே இதுதொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற 3 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும்.அவருக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை தொடர்பான ஆவணங்களை பாதுகாக்க வேண்டும். அதுபோல மெரினாவில் அடக்கம் செய்யப்பட்டுள்ள
ஜெயலலிதாவின் உடலை பத்திரமாக பாதுகாக்க உத்தரவிட வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால், அந்த ஆதாரங்கள் எல்லாம் அழிக்கப்பட்டு விடும்.மரணம் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசு மற்றும் மருத்துவமனை நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் அவர் கோரியிருந்தார்.
இந்நிலையில் இன்று உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் முன் வழக்கு விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. 4 வாரங்களுக்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட உயர் நீதிமன்றம் பிப்ரவரி மாதம் 23-ம் தேதி வழக்கை ஒத்திவைத்துள்ளது.