முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆணையத்தில் இதுவரை 120 பேர் புகார் மனுக்கள் அளித்துள்ளனர். மேலும், 28 பேர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எழிலகம் கல்சா மகால் கட்டிடத்தில் விசாரணை ஆணையத்துக்கான அலுவலகம் அமைந்துள்ளது.


இதன் தொடர்ச்சியாக, ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து, அவருடன் நெருக்கமாக இருந்தவர்களிடம் தகவல்கள் பெற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் முடிவு செய்தது.


அவற்றின் அடிப்படையில் கடந்த மாதம் 22-ந் தேதி முதல் ஆணையம் நேரடி விசாரணை நடத்தி வருகிறது. 


விசாரணை ஆணையத்தில் இதுவரை ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அவரது கணவர் மாதவன், அண்ணன் தீபக், இளவரசி மகள் கிருஷ்ணபிரியா, சென்னை மருத்துவக் கல்லூரி உடற்கூறுயியல் துறை தலைவர் சுதா சே‌ஷய்யன், ஜெயலலிதாவின் கைரேகைக்கு சான்றழித்த டாக்டர் பாலாஜி, தி.மு.க. பிரமுகர் டாக்டர் சரவணன் உள்பட 25-க்கும் மேற்பட்டவர்கள் விசாரணை கமி‌ஷனில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.


அதன் அடிப்டையில் சசிகலா, அப்போலோ மருத்துவமனை குழுமத் தலைவர் பிரதாப் ரெட்டி, உள்ளிட்டோருக்கும் ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பி இருந்தது.


அதனை தொடர்ந்து, ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ அடங்கிய ‘பென் டிரைவ்’வையும் டி.டி.வி. தினகரன் தனது வக்கீல் மூலம் ஆணையத்தில் சமர்பித்துள்ளார்.


இந்த நிலையில் அப்பல்லோ மருத்துவமனையின் கண்காணிப்பாளர் டாக்டர் சத்யபாமா இன்று விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்து வருகிறார்.


மேலும், 8ம் தேதி ஜெயலலிதா குடும்ப மருத்துவர் சிவக்குமார், 9ம் தேதி ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன் மற்றும் 10ம் தேதி ஜெயலலிதாவின் பாதுகாவலர் பெருமாள்சாமி, 11ம் தேதி மருத்துவர் பாலாஜி, 12ம் தேதி இதயநோய் சிகிச்சை மருத்துவர் சாமிநாதன் ஆகியோர் ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது.