ஜெயலலிதா மரணம்: வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து தமிழக அரசு வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-
கடந்த செப்டம்பர் 22-ம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட போது காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைவு என்று கூறப்பட்டது. பின்னர் அவர் நுரையீரல் கோளாறு உள்ளிட்ட பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. கடைசியில் இதய முடக்கத்தால் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
எந்த காரணத்தை முன்னிட்டும் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகளை அரசியலாக்க விரும்பவில்லை. திமுகவும் இதை அரசியலாக்க விரும்பவில்லை. இருந்தாலும், ஜெயலலிதா சாதாரண ஒருவரல்ல. தமிழகத்தின் முதல்வராக மிகப்பெரிய பொறுப்பில் இருந்தவர். அவருடைய மறைவு என்பது வேதனைக்குரிய ஒன்றாக அமைந்திருக்கிறது.
அண்ணா முதல்வராக இருந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தபோது, அன்றைக்கு அரசின் சார்பில், முதல்வரின் உடல் நிலை பற்றிய தெளிவான விவரங்களை காலை, மாலை என இருமுறை அறிக்கைகள் வெளிப்படுத்தினார்கள்.
அதேபோல எம்.ஜி.ஆர். மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சேர்க்கப்பட்டு இருந்த போது, அன்றைய சுகாதாரத்துறை அமைச்சரான ஹெச்.வி.ஹண்டே முறையான அறிவிப்புகள் மூலம் அவரது உடல் நலன் பற்றி அறிவித்தார்.
ஆனால், ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அரசும் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை, சுகாதாரத்துறை அமைச்சரும் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை, முதல்வருக்கு அடுத்த நிலையில் இருக்கக்கூடிய, முதல்வரின் இலாகாக்களை எல்லாம் பொறுப்பேற்றுக் கொண்டிருந்த நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. அப்போல்லோ மருத்துவமனையின் சார்பில் மட்டும் தான் அவ்வப்போது ஒருசில அறிக்கைகள் வெளியிடப்பட்டன. அவையும் ஒன்றுக்கு ஒன்று முரண்பாடான நிலையில் இருந்தன என்பதும் எல்லோருக்கும் தெரியும். இப்போது, அவர் மறைந்து விட்டார். அவரது இழப்பு என்பது ஈடு செய்ய முடியாதது.
இந்த நிலையில் இன்றைக்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து ஊடகங்களில், பத்திரிகைகளில் தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றன. நேற்றைக்கும் கூட உச்ச நீதிமன்றத்தில் கூட ஒரு பொது நல வழக்கு தொடரப்பட்டதாக செய்தி வெளியானது. இந்த நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ராமதாஸ் கூட இன்றைக்கு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று கேட்டுள்ளார். அதை நானும் வலியுறுத்துகிறேன். ஏனென்றால், இதை அரசியல் நோக்கத்தோடு சொல்லவில்லை, முதல்வரின் மரணம் பற்றி பல தரப்பினரிடமும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அந்த சந்தேகத்தினை முழுமையாக போக்க வேண்டுமென்று சொன்னால், ராமதாஸ் குறிப்பிட்டது போல, வெள்ளை அறிக்கை வெளியிடக்கூடிய நிலையை ஏற்படுத்த வேண்டும்.
அதேபோல மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள எய்ம்ஸ் மருத்துவர்களும் முதல்வருக்கு சிகிச்சை அளித்துள்ளதால், அந்த சிகிச்சை விவரங்களை மத்திய அரசாவது வெளிப்படையாக நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்பது தான் என்னுடைய கருத்து என அவர் தெரிவித்தார்.