சென்னை ஐகோர்ட்டில் டிராபிக் ராமசாமி நேற்று ஒரு பொது நல வழக்கை தாக்கல் செய்தார். அவர் கூறி இருப்பதாவது:- கடந்த 22-ம் தேதி தமிழக முதல் - அமைச்சர் ஜெயலலிதா உடல் நலம் பாதிக்கப்பட்டு, அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல் நலம் குறித்து அடிக்கடி பல வதந்திகள் வருகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்த விவரங்களை பொது மக்களுக்கு தெரியப்படுத்த தமிழக தலைமை செயலாளர், உள்துறைச் செயலாளர், அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம் உள்ளிட்டோருக்கு உத்தரவிடவேண்டும்'.


மேலும் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதால், அவர் மேற்கொள்ள வேண்டிய அரசு பணிகள் எல்லாம் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே அவர் பூரணகுண மடைந்து மீண்டும் அரசு பணிகளை மேற்கொள்ளும் வரை தற்காலிக முதல்-அமைச்சர் ஒருவரை நியமிக்க உத்தரவிட வேண்டும் என டிராபிக் ராமசாமி கூறியிருந்தார்.


இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று நேற்று டிராபிக் ராமசாமி கோரிக்கை விடுத்தார். அப்போது இந்த வழக்கை இன்று விசாரிப்பதாக கூறியிருந்தனர்.


அட்வகேட் ஜெனரல் மணி சங்கரிடம் முதல்-அமைச்சர் உடல் நலம் குறித்து ஏன் பொதுமக்களுக்கு எதுவும் தெரிவிப்பதில்லையே ஏன்?' என்று நீதிபதிகள் கேள்விக் எழுப்பினர்.


அதற்கு பதில் அளித்த கூடுதல் அட்வகேட் ஜெனரல்:- முதல்-அமைச்சர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவது என்பது அவரது தனிப்பட்ட விஷயம். தனிப்பட்ட விஷயங்களை எல்லாம் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்று கேட்க கூடாது. அது அவரது அந்தரங்க விஷயம்' என்று கூறினார்.


அதற்கு நீதிபதிகள், 'உடல் நலம் குறைவு என்பது ஒருவரது அந்தரங்க விஷயம் தான். ஆனால், ஜெயலலிதாவை பொருத்தவரை அவர் தமிழக முதல்-அமைச்சர். அவரது உடல் நலம் குறித்து விவரம் தெரிந்து கொள்ள பொதுமக்கள் விரும்பத்தான் செய்வார்கள். அதை அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்' என்றார்கள்.


இதற்கு பதில் கூறிய கூடுதல் அட்வகேட் ஜெனரல், 'அதற்குத் தான் அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம் உடல் நலம் குறித்த விவரங்களை அறிக்கையாக பத்திரிகை வாயிலாக தெரியப்படுத்துகிறது' என்றார்.


'அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம் அறிக்கை வெளியிட்டாலும், தமிழக அரசு ஏன் இது பற்றி எதுவும் கூறாமல் உள்ளது? அரசின் முக்கிய முடிவுகளை யார் எடுக்கிறார்கள்? என்பதை மக்களுக்கு ஏன் தெரியப் படுத்தவில்லை? தலைமை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் இதுகுறித்து பொது மக்களுக்கு ஏன் விளக்கம் அளிக்கவில்லை?' என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள்.


இதற்கு கூடுதல் அட்வகேட் ஜெனரல், 'இதுகுறித்து அரசின் கருத்தை கேட்டு தெரிவிப்பதாக கூறினார். இதையடுத்து வழக்கை நாளை அல்லது நாளை மறுநாள் விசாரிப்பதாக நீதிபதிகள் கூறினார்கள். அதற்குள் தமிழக அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.