ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மங்கள் பற்றி தினந்தோறும் செய்திகள் சமூக வலைதளங்கள் மூலமும்,  ஊடகங்கள் மூலமும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கூறிவருகிறார். தீபா தான் அடுத்த முதல்வராக வேண்டும் என அதிமுக-வில் சில பேர் ஆதரவு தெரிவித்து வருகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியதாவது:-


நான் பெரிதும் மதிக்கும் அதிமுக தொண்டர்களுக்கு எனது பணிவான வேண்டுகோள் என் மீது அன்பு காட்டி எனக்கு பேனர்கள், கட்அவட் வைப்பது எனது படத்துடன் போஸ்டர் ஒட்டுவது போன்ற செயல்களில் அதிமுக தொண்டர்கள் யாரும் ஈடுபட வேண்டாம். இது எனது பணிவான வேண்டுகோள். மறைந்த முதல்வர்கள் புரட்சி தலைவர் எம்ஜிஆர், புரட்சி தலைவி ஜெயலலிதா ஆகியோரின் உண்மையான தொண்டர்கள் அனைவரும் அமைதியுடன் பொறுமை காக்க வேண்டிய தருணம் இது. 


இப்போதைய சூழலில் தேவையில்லாத சர்ச்சைகளுக்கு அதிமுகவின் உண்மை தொண்டர்கள் புரட்சி தலைவர் எம்ஜிஆர் மறைந்த முதல்வர் அம்மா ஆகியோரின் விசுவாசிகள் யாரும் இடம் கொடுத்து விடக்கூடாது. இந்த இக்கட்டான தருணத்தில் எனக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் உங்கள் அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான நன்றி எனக்காக நீங்கள் அளித்து வரும் உணர்வு பூர்வமான ஆதரவை நான் ஒரு போதும் மறக்க மாட்டேன், 


நல்லது நிச்சயம் நடக்கும் அதற்காக ஒவ்வொருவரும் குறிப்பாக அதிமுக தொண்டர்கள் பொறுமை காக்க வேண்டும் என்பதே இந்த தருணத்தில் என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் 


நான் பெரிதும் மதிக்கும் கட்சி தொண்டர்களால் அம்மா என்றழைக்கப்படும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை இழந்த துக்கத்தில் இருந்து நான் இன்னும் மீளவில்லை. இந்த இக்கட்டான சமயத்தில் என் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள இழப்பை கருத்தில் கொண்டு நான் அமைதியாக துக்கத்தை அனுசரிக்க அனுமதிக்க வேண்டும் என்று அதிமுக தொண்டர்கள் ஒவ்வொருவரையும் அன்போடு கேட்டு கொள்கிறேன். 


எதிர்கால நலன் கருதி எல்லாவற்றையும் யோசித்து சரியான நேரத்தில் நிச்சயம் என்னுடைய முடிவை அறிவிப்பேன். என்னுடைய வழி சரியான பாதையில் நல் எதிர்காலத்தை நோக்கி நிச்சயம் இருக்கும். நமது உயிரினும் மேலான புரட்சித் தலைவி அம்மா ஆகியோரின் நல்லாசியோடு நமது தேசத்தின் வளர்ச்சியையும் அதிமுக-வின் வளர்ச்சியையும் சாதனைகளையும் எதிர்காலத்தையும் மனதில் வைத்து இந்த தருணத்தில் செயல்பட வேண்டுகிறேன். உங்கள் அன்புக்கு நான் நிச்சயம் நன்றி உடையவளாக இருப்பேன் என கூறியிருக்கிறார்.