ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை  விதிமுறைகளை மீறி வெளியிட்ட வெற்றிவேல் மீது வழக்கு பதிவு நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் கூறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முதல் - அமைச்சராக இருந்த ஜெயலலிதாவுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ந்தேதி திடீரென உடல்நலக் குறைவு காரணமாக, சென்னையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு,பின்னர் அவர் சிகிச்சைபலனின்றி    டிசம்பர் மாதம் 5-ந்தேதி உயிரிழந்தார்.


அதை தொடர்ந்து ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பல்வேறு குற்றச்சாட்டுகள்இருந்து வந்தது. ஜெயலலிதா மரணம் அடைந்ததை தொடர்ந்து முதல்-அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், அதன் பின்னர் சசிகலாவுக்கு எதிராக செயல் பட்டு வந்தார். அதன் பின்னர் இந்த பிரச்சினையை பூதாகரமாக கிளப்பினார்.


தற்போது ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுக சாமி  தலைமையில் விசாரணை நடைபெற்று  வருகிறது. 


ஏற்கனவே தினகரன் தரப்பு ஜெயலலிதா சிகிச்சைக்கான வீடியோ பதிவுகள் எடுக்கப்பட்டது. அந்த வீடியோ பதிவு என்னிடம் உள்ளது. அதை அவசியம் வரும் போது வெளியிடுவோம் என கூறி இருந்தது. 


இந்த நிலையில் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சையின் போது எடுத்த வீடியோவை இன்று தினகரன் தரப்பு வெளியிட்டு உள்ளது. அதில் ஜெயலலிதா பழசாறு அருந்துவது போல் உள்ளது.


அதனை தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ குறித்த பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்த  நிலையில்  தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


இது குறித்து  சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன்  கூறியதாவது;-


ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோ வெளியிட்ட வெற்றிவேல் மீது வழக்கு பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.  தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவின் பேரில்  தேர்தல்  நடத்தும் அலுவலர் பிரவீண்நாயர் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.


126(பி) சட்ட விதிப்படி வெற்றிவேல் மீது வழக்குப்பதிவு செய்ய தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 


ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில் இன்று தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோ என்று கூறி ஒரு வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.