ஜே.என்.யூ.மாணவர் முத்துக்கிருஷ்ணன் மரணத்திற்கு உரிய நீதிவிசாரணை வேண்டும்- சீமான் வலியுறுத்தல்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறையில் பிஎச்டி படித்து வந்த ஜே.என்.யூ. மாணவர் முத்துக்கிருஷ்ணன் மர்மமான முறையில் உயிரிழந்தார். 


இந்நிலையில் மத்திய பல்கலைக்கழகங்களையும் மாநில அரசின் அதிகாரவரம்பிற்குள் கொண்டுவரவேண்டும். ஜே.என்.யூ. மாணவர் முத்துக்கிருஷ்ணன் மரணத்திற்கு உரிய நீதிவிசாரணை வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.


இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.


அதில் சீமான் அவர்கள் கூறியிருப்பதாவது:-


ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நவீன வரலாறு பாடத்தில் ஆய்வு மேற்கொண்டிருந்த சேலம் மாணவர் முத்துக்கிருஷ்ணன் தற்கொலை செய்துகொண்டதாக அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியினையும், ஆழ்ந்த மனவேதனையினையும் தருகிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவித்து, அவர்களது குடும்பத் துயரத்தில் நாம் தமிழர் கட்சி முழுமையாகப் பங்கேற்கிறது.


ஒடுக்கப்பட்ட சமூகத்தில், மிகவும் பின்தங்கிய குடும்பச் சூழலில் பிறந்து வளர்ந்த முத்துக்கிருஷ்ணன், தனது தன்னம்பிக்கையினாலும், மன உறுதியாலும் மொத்த இந்தியாவிலும் ஆயிரக்கனக்கான மாணவர்களினுடனான போட்டியில் தேர்வாகி டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் ஆய்வு மாணவராகச் சேருமளவுக்குக் கல்வியிலே தழைத்தோங்கியிருக்கிறார். அத்தகைய பேராண்மையோடு திகழ்ந்த மாணவர் முத்துக்கிருஷ்ணன் தற்கொலை செய்துகொண்டார் என்று கூறப்படுவது நம்பும்படியாக இல்லை. மாணவரின் தந்தையும் தனது மகன் தற்கொலை செய்துகொள்கிற அளவுக்குக் கோழை இல்லை என்றும், அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் தெரிவித்திருப்பது இவ்விவகாரத்தில் நமக்குள்ள ஐயப்பாட்டினை சரியென மெய்ப்பிக்கிறது.


மேலும், மரணத்திற்குச் சில நாட்களுக்கு முன்பாக முத்துக்கிருஷ்ணன் தனது முகநூல் பக்கத்தில், ‘சமூகத்தின் விளிம்புநிலையிலிருந்து வருபவர்களுக்குக் கல்வி மறுக்கப்படுகிறது. சமத்துவம் பேணப்படுவதில்லை.’ என்று தெரிவித்திருப்பதும், ஹைதராபாத்தில் பட்டப்படிப்புப் பயின்றபோது ரோகித் வெமுலாவை முத்துக்கிருஷ்ணன் அறிந்திருந்தார் என்பதும், ரோகித்தின் மரணத்திற்கு நீதிவிசாரணை கோரிப் போராடினார் என்பதும் இம்மரணத்தில் கவனிக்கத்தக்கதாகும். ஏற்கனவே, டெல்லி எய்ம்ஸ் கல்லூரி மருத்துவ மாணவர் திருப்பூர் சரவணன் மரணமடைந்தபோதும் இதேபோல முதலில் தற்கொலை என்றுதான் டெல்லி காவல்துறையினர் பதிவுசெய்தார்கள். 


பின்புதான் பிரேதப்பரிசோதனை மூலம் அது திட்டமிட்ட படுகொலையாக இருக்கலாம் என்ற சந்தேகங்கள் எழுப்படுகிறது. அந்தப் படுகொலைக்கான காரணகர்த்தாக்களே இன்னும் கண்டறிந்து கைதுசெய்யாத நிலையில், தற்போது நிகழ்ந்திருக்கும் முத்துக்கிருஷ்ணனின் மரணமானது டெல்லியில் கல்வி கற்கும் தமிழக மாணவர்கள் குறித்து அச்சத்தை விளைவிக்கிறது. ஏற்கனவே, இந்திய அளவில் கையெறிப் பந்து போட்டியில் பங்கேற்க டெல்லிக்குச் சென்ற தமிழக வீரர்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலும் தமிழர்களை மாற்றாந்தாய் மனப்பான்மையோடே இந்தியப் பெருநாடு அணுகுவதை அறுதியிட்டுக் கூறுகிறது. இது போன்ற தொடர் இக்கட்டுகளுக்கு ஆளாகும் தமிழ் மாணவர்களுக்கு எவ்வித அடிப்படை பாதுகாப்பையும் உறுதிப்படுத்தாத தமிழர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசின் நிலையோ பரிதாபம்.


அடிமை இந்தியாவில் தீண்டாமைக் கொடுமைகளுக்கிடையேயும், சாதிய ஏற்றத்தாழ்வுகளுக்கிடையேயும் படித்துப் பட்டம் பெற்று மாமேதையாக அண்ணல் அம்பேத்கரால் திகழ முடிந்தது. ஆனால், இன்றைக்குச் சுதந்திர இந்தியாவில் ரோகித் வெமுலாவும், முத்துக்கிருஷ்ணனும் பட்டப்படிப்புக்குச் சென்றால் உயிரையே இழக்கிறார்கள் எனும் துர்பாக்கிய நிலையானது ஒட்டுமொத்த இந்திய மக்களும் வெட்கித் தலைகுனியக்கூடியதாகும். வேற்றுமையில் ஒற்றுமை, இந்திய இறையாண்மை என வாய்கிழிய பாடமெடுக்கும் இந்தியாவில், நாட்டின் கடைக்கோடியில் இருந்து தலைநகருக்குக் கல்விகற்கச் செல்லும் மாணவன் உயிரை இழப்பது இந்தியர்களின் தேசிய அவமானமாகும். அதை மறந்து புதிய இந்தியாவைப் பிரசவிக்கப் போவதாக மார்தட்டும் பாரதப் பிரதமர் மோடி வெட்கி தலைகுனிய வேண்டும். மோடி அவர்களின் அந்த இந்தியாவையாவது சாதிய, தீண்டாமைக் கொடுமைகளற்ற, ஏற்றத்தாழ்வுகளற்ற நாடாகப் படைப்பாரா? என்பதுதான் இன்றைய கேள்வி. இந்நூற்றாண்டின் ஈடு இணையற்ற பேரரறிஞராக இருக்கிற அண்ணல் அம்பேத்கர் அவர்கள், ‘பல்லாயிரம் சாதிகளாகப் பிளவுபட்டு நிற்கிற இந்தியக் குடிமக்களுக்குத் தாங்கள் ஒரே நாட்டைச் சேர்ந்தவர் என்ற எண்ணம் வருவதே கடினமானது’ என்று உரைப்பதன்மூலத்தை நாம் உணர முடியும்.


மாணவர் முத்துக்கிருஷ்ணன் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது டெல்லிக்குக் கல்வி பயிலச்செல்லும் மாணவர்கள் மத்தியிலும், அவர்களது பெற்றோர்கள் மத்தியிலும் பதற்றத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது என்றால் மிகையாகாது. இனி ஒரு உயிர் இழப்பும் நேரிடாது, தென் மாநிலங்களில் இருந்து வடமாநிலத்திலுள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் படிக்கவரும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவேண்டியது, மத்திய மாநில அரசுகளின் தலையாயக் கடமை என்று உணரவேண்டும். எனவே, கொலை வழக்கு என நிரூபணம் செய்யப்பட்டிருக்கிற திருப்பூர் சரவணனின் மரணம் குறித்தும், சேலம் முத்துக்கிருஷ்ணனின் மர்ம மரணம் குறித்தும் உரிய நீதிவிசாரணைக்கு மத்திய, மாநில அரசுகள் அடிகோல வேண்டும். இத்தோடு, மத்திய பல்கலைக்கழகங்கள் எனத் தான்தோன்றித்தனமாகச் செயல்படும் இந்நாட்டிலுள்ள அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களையும் மாநில அரசின் அதிகாரவரம்பிற்குள் கொண்டுவரவேண்டும். மேலும், 27 சதவீத இட ஒதுக்கீட்டை கடைபிடிக்காத மத்திய பல்கலைக் கழகங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்.


இதுபோன்ற மாணவர்களின் தொடர் மரணங்கள் இல்லா நிலையை உருவாக்குவது அங்குள்ள பேராசிரியர்களின் கடமை. அவர்களின் முனைப்பாலும் முயற்சியாலும் மட்டுமே இந்த இக்கட்டான அவநிலையை மாற்றமுடியும் என்று முழுமையாக நம்புகிறேன். மத்திய பல்கலைக்கழகங்களில் சமூகநீதியின் அடிப்படையிலே பிற்படுத்தப்பட்ட மிகவும்பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட பேராசிரியர்களின் காலியிடங்களை உடனடியாக நிறப்பித் தகுந்த திரமையுடையவர்களை நியமிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.


இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.