COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திருப்பூர் மாவட்டம், உடுமலை குமரலிங்கத்தை சேர்ந்தவர் சங்கர். இவர், பழநியைச் சேர்ந்த கவுசல்யா என்ற பெண்ணை காதலித்து கலப்பு மணம் செய்தார். 


இந்நிலையில் ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட சங்கரை கும்பல் ஒன்று உடுமலை பேருந்து நிலையம் அருகே வெட்டியது. இந்த சம்பவத்தில் சங்கர் உயிரிழந்து விட்டார். இதனை தொடர்ந்து நடந்த வழக்கில் கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி, தாய் அன்னலட்சுமி, மாமா பாண்டித்துரை உட்பட 9 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனர்.


இந்த வழக்கு சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. இதனை விசாரித்த நீதிபதி அலமேலு நடராஜன் கடந்த டிசம்பர் 12ம் தேதி இறுதி தீர்ப்பு வழங்கினார். அப்போது அதில், முதல் குற்றவாளியான தந்தை சின்னசாமி, கூலிப்படையை சேர்ந்த ஜெகதீசன், 5வது குற்றவாளியான மணிகண்டன், 6வது குற்றவாளியான செல்வகுமார், 7வது குற்றவாளியான கலை தமிழ்வாணன், 8வது குற்றவாளியான மதன் என்கிற மைக்கேல் ஆகிய 6 பேருக்கும் இரட்டை தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டார். 9-வது குற்றவாளியான ஸ்டீபன் தன்ராஜூக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், 11-வது குற்றவாளியான மணிகண்டனுக்கு ஐந்தாண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், இந்த வழக்கு விசாரித்த நீதிபதி அலமேலுவுக்கு கோவையில் திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் சேர்க்கப்பட்டார். ஆனால் அவருக்கு அளித்து வந்த சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்து உள்ளார்.