தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை:-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மதுக்கடைகளை மூடச் சொல்லி தமிழகம் முழுவதும் மகளிரே தாமாக முன் வந்து மதுக்கடைகளின் முன்பு கூடி போராடுவது, கடைகளை உடைப்பது, மதுபாட்டில்களை எடுத்து தெருவில் வீசுவதும் அன்றாடக் காட்சி ஆகி வருகிறது.


அதனை அடக்கி ஒடுக்க காவல் துறையினர் பொது மக்களை, பெண்கள், வயதானவர்கள் என்றும் பாராமல் கண்மூடித்தனமாக தடியால் தாக்குவதும் கண்டிக்கத்தக்கது.


மக்களைக் காக்க வேண்டிய காவல்துறை மதுக்கடை உரிமையாளர்களின் ஏவல் துறையாக மாறி செயல்படுவது கண்டிக்கத்தக்கது.


மதுக்கடை உரிமையாளர்கள் நேரடியாக போராடும் பொதுமக்களுக்கு தலைமையேற்ற பா.ஜ.க நிர்வாகி தாம்பரம் பொற்றாமரை சங்கருக்கு கொலை மிரட்டல் போன்ற நிலை தமிழக அரசுக்கு தமிழகம் முழுவதும் சட்ட ஒழுங்கு பிரச்சனையாக மாறும் என எச்சரிக்கிறேன்.


படிப்படியாக மதுக் கடைகளை மூடுவோம் என்பது மறைந்த முதல்வர் ஜெயலலிதா சொன்ன உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டிய அரசு மது கடைகளை மூடச்சொல்லி போராடும் மக்கள் மீது நேரடி தாக்குதல் நடத்துவது என்ன நியாயம்?


மக்கள் விரும்பாத இடங்களில் உள்ள மதுக்கடைகளை அரசு உடனே மூட வேண்டும். மதுவுக்கு எதிராக தமிழகப் பெண்களின் போராட்டத்தை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல பெண்களை திரட்டி வருகிற ஜூன் 16-ந் தேதி நானே தலைமையேற்று கோட்டை நோக்கி பேரணியாக செல்ல உள்ளோம்.


இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.