தமிழக அரசு சார்பில் கலைமாமணி விருது வழங்கும் விழா சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நேற்று மாலை நடைப்பெற்றது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் பல்வேறு கலைப்பிரிவுகளின் கீழ் கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் 2018-ஆம் ஆண்டு வரை 8 ஆண்டுகளாக கலைமாமணி விருது வழங்கப்படாமல் இருந்தநிலையில் தமிழக அரசு சார்பில் கலைமாமணி விருது வழங்கும் விழா சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நேற்று மாலை நடைப்பெற்றது.


விழாவிற்கு சபாநாயகர் ப.தனபால் தலைமை தாங்கினார். தலைமைச்செயலாளர் க.சண்முகம் வரவேற்பு உரை வழங்கினார். தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற உறுப்பினர்-செயலாளர் வீ.தங்கபாலு அறிக்கை வாசித்தார். இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி விழா மலரை வெளியிட்டார். அதன் முதல் பிரதியை ப.தனபால் பெற்றுக்கொண்டார்.


விழாவில், கலைஞர்களுக்கு ‘கலைமாமணி’ விருது, தங்கப்பதக்கம், சான்றிதழ் மற்றும் அகில இந்திய விருதாளர்களுக்கு சான்றிதழ், காசோலை, பொற்கிழி, கேடயம் ஆகியவற்றை எடப்பாடி பழனிசாமி வழங்கி கவுரவித்தார். 


விழாவில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-


பொதுமக்களை மகிழ்விக்கும் கலைஞர்கள் எப்போதும் தங்கள் வாழ்வில் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்ற நோக்கத்தில், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் ஆட்சிக்காலங்களில் பல்வேறு நலத்திட்டங்களையும், விருதுகளையும் அறிவித்து, அவர்களை ஊக்கப்படுத்தி வந்தார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.


அந்த வகையில், இயல், இசை, நாடகம், நாட்டியம், திரைப்படம், சின்னத்திரை, கிராமியக் கலை மற்றும் இதர கலைத் துறைகளில் சிறந்து விளங்கும் 201 கலைஞர்களுக்கு கலைமாமணி விருது வழங்கியதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். இதில் 72 வகையிலான கலைப் பிரிவுகளில் சிறந்து விளங்கும் கலைஞர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளன.


கலைஞர் பெருமக்கள் சில கோரிக்கைகளை வைத்திருக்கிறார்கள். இங்கே கலைமாமணி விருது வழங்குகின்றபொழுது இந்த கோரிக்கைகளை நீங்கள் நிறைவேற்றி தரவேண்டும் என்று அன்பு வேண்டுகோள் விடுத்தார்கள். அதனை ஏற்று அதிமுக அரசால் சில அறிவிப்புகளை வெளியிட விரும்புகிறேன்.


அதாவது, கலைமாமணி விருது 3 பவுனுக்கு பதிலாக இனி 5 பவுன், அதாவது 40 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கங்களாக வழங்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் ஜெயலலிதா பெயரில் 3 சிறப்பு கலைமாமணி விருதுகள் சிறப்பு விருதுகளாக இனி வழங்கப்படும். இவையும் தலா 5 பவுன் எடையுள்ள பொற்பதக்கங்களாக வழங்கப்படும். நலிந்த மூத்த கலைஞர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் உதவித்தொகை ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என தெரிவித்தார்.


---விருது பெற்றவர்கள் விவரம்---


‘கலைமாமணி’ விருது பெற்ற அரிகேசநல்லூர் வெங்கட்ராமன் இசை விமர்சகர் ஆவார்.  எழுத்தாளர் பிரிவில் ‘கலைமாமணி’ விருது பெற்ற மணவை பொன் மாணிக்கம் எம்.ஜி.ஆர். பற்றி, ‘8-வது வள்ளல் எம்.ஜி.ஆர்.’, ‘புகழ்மணச்செம்மல் எம்.ஜி.ஆர்.’ ஆகிய 2 நூல்களை எழுதியுள்ளார். தூர்தர்ஷனில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரி கவிஞர் பாலரமணி, டாக்டர் அமுதகுமார், லதா ராஜேந்திரன் ஆகியோரும் சிறப்பான பங்களிப்பு கொடுத்ததற்காக ‘கலைமாமணி’ விருதுகளை பெற்றுள்ளனர்.


நடிகர்கள் பாண்டியராஜன், சரவணன், ஸ்ரீகாந்த், சசிகுமார், கார்த்தி, விஜய் ஆண்டனி, பிரசன்னா, எம்.எஸ்.பாஸ்கர், தம்பிராமையா, சூரி, பாண்டு, சிங்கமுத்து, இயக்குனர் ஹரி, தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன், நடிகைகள் வைஜெயந்தி மாலா, நளினி, குட்டி பத்மினி, காஞ்சனா, கானா பாலா, கானா உலகநாதன், பரவை முனியம்மா, பாடகர் வேல்முருகன் உள்பட திரையுலகை சேர்ந்த பலர் விருதை பெற்றனர். நடிகை பிரியாமணிக்கான விருதை அவருடைய தாயாரும், நடிகர் பிரபுதேவா விருதை அவருடைய தந்தையும் பெற்றுக்கொண்டனர். திருநங்கை சுதாவும் கலைமாமணி விருது பெற்றார். நடிகர் விஜய் சேதுபதி, பாடலாசிரியர் யுகபாரதி ஆகியோர் விழாவில் பங்கேற்கவில்லை.


விழாவில் அமைச்சர் க.பாண்டியராஜன், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் தலைவர் தேவா ஆகியோர் ‘கலைமாமணி’ விருது பெற்றவர்களை வாழ்த்தி பேசினார்கள். நிறைவாக கலை பண்பாட்டுத்துறை கமிஷனர் (பொறுப்பு) க.பணீந்திர ரெட்டி நன்றி கூறினார்.