கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கமல் பங்கேற்கவில்லை...
அண்ணா அறிவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க முடியவில்லை என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்!
சென்னை: அண்ணா அறிவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க முடியவில்லை என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்!
திமுக கட்சி தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களில் சிலை திறப்பு விழா இன்று நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அனைத்து தலைவர்களுக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளது. இதன் காரணமாக சென்னை முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கருணாநிதி சிலை திறப்பு விழாவில் தன்னால் கலந்து கொள்ள முடியவில்லை என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கமல்ஹாசன் தெரிவிக்கையில்... "கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்காக செல்வதால், திமுக தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் என்னால் கலந்துகொள்ள முடியவில்லை. கருணாநிதியின் மீது எப்போதும் எனக்கு மரியாதை உண்டு. ஏற்கெனவே நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துவிட்டதால், தற்போது சிலை திறப்பு விழாவில் பங்கேற்க முடியவில்லை." என தெரிவித்துள்ளார்.
மேலும்., ஸ்டெர்லைட் விவகாரத்தில் எந்த அரசாக இருந்தாலும் மக்களை மதித்து நடக்க வேண்டும். தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தின் ஸ்டெர்லைட் பற்றிய கருத்தும் முடிவும் ஏற்புடையதாக இல்லை. இந்தத் தீர்ப்பில் தனக்கு உடன்பாடு இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.