அரசியலின் வெற்றி ரகசியம் கமலுக்கு தெரியும்: ரஜினி
நடிகர் சிவாஜி கணேசன் நினைவாக, சென்னையில் கட்டப்பட்டுள்ள மணிமண்டபத்தை, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று திறந்து வைத்தார்.
தமிழக அரசு சார்பில், நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சென்னை அடையாறு பகுதியில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
சிவாஜியின் பிறந்த நாளான இன்று, இந்த மணிமண்டபம் திறக்கப்பட்டது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்று இதனைத் திறந்து வைத்தார்.
மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் நடந்த இவ்விழாவில், அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலை வகித்தார். அமைச்சர்கள் மாபா பாண்டியராஜன், பெஞ்சமின் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் பங்கேற்ற நடிகர்கள் ரஜினி, கமலை துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் ஒரே மேடையில் அமர்ந்து இருந்தனர்.
அப்போது விழாவில் பேசிய ரஜினிகாந்த்:-
‘துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மிகவும் அதிர்ஷ்டசாலி. அது பலமுறை நிரூபணமாகியுள்ளது. காலகாலத்துக்கும் உயர்ந்து நிற்கப் போகும் இந்த மணிமண்டபத்தை திறக்கும் பாக்கியம் ஓ.பி.எஸ்ஸுக்கு கிடைத்துள்ளது.
நடிகர் சிவாஜி கணேசன் நடிப்பில் சக்ரவர்த்தி. நடையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவர். கடவுள் மறுப்பு உச்சத்தில் இருந்தபோது சிவாஜி ஆன்மீக படங்களிலும் நடித்தவர்.
சிலை என்பது மக்களால், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட வேண்டும். அப்போது தான் அதற்கு மதிப்பு. இது அரசியல், சினிமா சேர்ந்த விழாவாகும். அரசியலில் வெற்றியடைய சினிமா புகழைத் தாண்டி ஒன்று தேவை என சிவாஜி புரிய வைத்துள்ளார். அது மக்களுக்கு மட்டும் தான் தெரியும்.
அது தற்போது நடிகர் கமல் ஹாசனுக்கு தெரியும் என்று நினைக்கிறேன். தெரிந்தாலும் சொல்லமாட்டார். ஒருவேளை 2 இரண்டு மாதங்களுக்கு முன் கேட்டிருந்தால் சொல்லியிருக்கலாம்.
தற்போது கேட்டால், என்னோடு வா சொல்கிறேன் என கமல்ஹாசன் குறிப்பிடுவதாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அவர் பேசினார்.