பொதுவாழ்விலும் வெற்றிபெற கமலுக்கு ரஜினி ட்விட்டரில் வாழ்த்து!!
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு, நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்!!
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு, நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்!!
தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் படங்களில் நடித்து வந்தபோதிலும், அரசியலிலும் களமிறங்கினர். `வரும் 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன்’ என்று, கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பரில் தெரிவித்திருந்தார் ரஜினிகாந்த். இதற்குப் பின்னரே, பிப்ரவரி 2018 ஆம் ஆண்டில் மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கினார் கமல்ஹாசன்.
இந்த நிலையில், மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இதனால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சில கட்சிகள் தங்களது கூட்டணியை அதிகாரபூர்வமாகவும் அறிவித்துள்ளன. தேர்தலையொட்டி, சிலர் புதிய கட்சியையும் தொடங்கியுள்ளனர். இந்தச் சூழலில் `மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனது கட்சி போட்டியிடலாம்’ என்று தெரிவித்த கமல்ஹாசன், பிற கட்சியினரையும் விமர்சனம் செய்தார்.
ஆனால், ரஜினிகாந்த்தோ, `நான் மக்களவைத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை. எந்தக் கட்சிக்கும் எனது ஆதரவும் இல்லை. தமிழகத்தின் தண்ணீர் பிரச்னையை யார் தீர்த்து வைப்பார்களோ அவர்களைச் சரியாக அடையாளம்கண்டு வாக்களியுங்கள்’ என்று அறிவித்தார்.
இந்தச் சூழலில், ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், `கட்சி ஆரம்பித்து, இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைத்து, தேர்தலில் முதல்முறையாகப் போட்டியிடப்போகும் மக்கள் நீதி மய்யத் தலைவர்.. என் நண்பர் கமல்ஹாசன் அவர்கள், பொதுவாழ்விலும் வெற்றி பெற என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்..’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்குப் பதிலளிக்கும்விதமாக கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், `நன்றி ரஜினிகாந்த், என் 40 ஆண்டுக்கால நண்பரே. நல்லவர் துணை நின்றால் நாற்பது எளிதே. நாளை நமதே’ என்று தெரிவித்துள்ளார். முன்னதாக, `தனக்கு ரஜினிகாந்தின் ஆதரவு கிடைக்கலாம்’ என செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார் கமல்ஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது.