நடிகர் கமல்ஹாசன் ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற புதிய கட்சியை தொடங்கி உள்ளார். புதன்கிழமை மதுரையில் நடைபெற்ற விழாவில் தனது கட்சியின் பெயரை அறிவித்த அவர், கட்சியின் கொடியையும் அறிமுகம் செய்து வைத்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த விழாவில் கலந்துகொண்ட பிறகு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான நடிகர் கமல்ஹாசன், மதுரையில் இருந்து விமானம் மூலம் நேற்று சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:-


தமிழக அரசு நடத்திய அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு எனக்கு அழைப்பு வரவில்லை. அதற்கு ஏதாவது சட்டசிக்கல் இருக்கலாம். அதுபற்றி தெரியவில்லை. எங்கள் கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துவிட்டோம். அதற்கான ரசீதும் வாங்கப்பட்டு விட்டது.


‘கிராமியமே எங்கள் தேசியம்’ என்று அறிவித்து இருப்பதால் அதற்கான ஆயத்தங்களை செய்து கொண்டு இருக்கிறோம். நான் இங்கே திரும்பி வந்தது ஒரு வேளை என் தேவை இருக்கலாம் என்ற நம்பிக்கையில் வந்தேன். இல்லையென்றால் என் வேலையை பார்க்க சென்றுவிடுவேன்.


அடுத்த மாதம் திட்டமிட்டபடி சிவகங்கை, திண்டுக்கல், பரமக்குடி அருகே ஒரு ஊர் என சில ஊர்களுக்கு செல்லும் பணி தொடரும்.


மதுரையில் நடந்ததுபோல் அடுத்த கூட்டம் ஏப்ரல் 4-ந் தேதி திருச்சியிலும் நடத்த திட்டமிட்டு உள்ளோம்.நான் விதைதான். மரபணு மாற்றப்பட்டது என விஞ்ஞானம் பேசி இருக்கிறார்கள். அதுபற்றி எனக்கு தெரியவில்லை. அதுபற்றி இப்போது பேச வேண்டாம். கட்சியை தொடங்கி இருப்பதால் மகிழ்ச்சியாக இருக்கிறது.