ஸ்டெர்லைட்: தூத்துக்குடிக்கு போய் பேசு முடியுமா? ஆர்என் ரவி பேச்சுக்கு கனிமொழி - உதயநிதியின் ரியாக்ஷன்
ஸ்டெர்லைட் போராட்டத்துக்கு வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டிருப்பதாக ஆளுநர் ஆர்என் ரவி குற்றம்சாட்டியிருக்கும் நிலையில் தூத்துக்குடிக்கு போய் உங்களால் இப்படி பேச முடியுமா? என சவால் விட்டுள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
கனிமொழி கண்டனம்
ஆளுநர் ஆர்என்.ரவி சென்னை கிண்டியில் நடைபெற்ற நிகழ்வில் பேசும்போது, தமிழகத்தில் கூடங்குளம் போராட்டத்துக்கு வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டது போலவே ஸ்டெர்லைட் போராட்டத்துக்கும் மக்களை தூண்டிவிட வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதன் மூலம் போராட்டம் நடத்தி ஆலையை மூடிவிட்டனர் என பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். அவரின் இந்த பேச்சு தமிழக அரசியல் கட்சி தலைவர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரான கனிமொழி, ஆளுநர் ஆர் என் ரவியின் பேச்சை கடுமையாக கண்டித்திருப்பதுடன், வெளிநாட்டு நிதி புழங்கியதற்கான ஆதாரத்தை கொடுக்குமாறு கேட்டிருக்கிறார்.
உதயநிதி ஸ்டாலின் ரியாக்ஷன்
இதேபோல், விளையாட்டு துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின், ஆளுநர் ஆர் என் ரவியின் பேச்சுக்கு தன்னுடைய கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் அமர்ந்து கொண்டு இப்படி பேசும் ஆளுநர் ஆர்என் ரவி, தூத்துக்குடிக்கு சென்று அங்கு இப்படி பேச முடியுமா?. மக்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் அவர் இப்படி பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. மக்கள் தன்னெழுச்சியாக போராடியதுடன், 100 நாட்களுக்கும் மேலாக அறவழியில் போராடியவர்கள் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இங்கு உட்கார்ந்து கொண்டு பேசும் அவர், தூத்துக்குடியில் போய் பேசினால் தான் அங்கு மக்கள் என்ன மனநிலையில் இருக்கிறார்கள் என்பது தெரியும்.
முதலமைச்சர் நடவடிக்கை
இதேபோல், ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தால் கிட்டத்தட்ட 42 க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்து இருக்கிறார்கள். சட்டமன்றத்தில் ஆளும் கட்சி எதிர்க்கட்சி என அனைத்து உறுப்பினர்களும் சேர்ந்து இந்த தீர்மானத்தை நிறைவேற்றி அனுப்பி வைத்திருக்கிறோம். ஆனால், அதற்கு ஒப்புதல் கொடுக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்துகிறார். நாங்கள் எல்லாம் மக்கள் பிரதிநிதிகள். இது மாநில சுயாட்சிக்கு ஏற்பட்டுள்ள பெரிய இழுக்கு. இதற்கு முதல்வர் மு.க ஸ்டாலின் அடுத்த கட்ட நடவடிக்கையை விரைவில் எடுப்பார் என்றும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ