தமிழகத்திற்கு காவிரி தண்ணீரை விட மாட்டோம் என்ற கர்நாடக காங்கிரஸ் அனைத்து எதிர்க் கட்சிக் கூட்டத்திற்கு தமிழக முதல்வர் செல்லக்கூடாது, அப்படி சென்றால் மீண்டும் தமிழகத்திற்குள் முதல்வர் வர அனுமதிக்க மாட்டோம் என கரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.  கரூர் மாவட்ட பாஜக சார்பில் மாநகராட்சிக்குட்பட்ட திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் ஒன்பதாண்டு கால பாஜக அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் மற்றும் "மாற்றத்திற்கான மாநாடு" என்ற தலைப்பிலான பொதுக்கூட்டத்தில் மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். இந்தக் கூட்டத்தில் மாநில துணைத்தலைவர் கேபி ராமலிங்கம், கரூர் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும்  ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசும் போது, கரூர் மாவட்டத்திற்கு இன்று தீபாவளி பண்டிகை போல் உள்ளது. சித்தர் கருவூரார் உள்ளிட்ட மகான்கள் வாழ்ந்த ஆன்மீக ஸ்தலமான சிறப்புமிக்க, தமிழகத்தின் மைய மாவட்டமான கரூர். அரசியல் கேடுக்கு மையப்புள்ளியாக கரூர் மாறி விட்டது. அதனால்தான் இந்த கூட்டத்திற்கு கரூர் மாற்றத்திற்கான மாநாடு என தலைப்பு வைக்கப்பட்டது. இந்த கூட்டத்திற்கு பல எதிர்ப்புகள் வந்தன. மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு சென்று அனுமதி வாங்கப்பட்டது. இந்த திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தை ஒரு மாதத்திற்கு புக் செய்திருப்பதாக திமுகவினர் கூறினர்.  செந்தில்பாலாஜியின் பதவிக்கு இந்த மாவட்ட ஆட்சியரும், எஸ்.பி-யும் போட்டி போடுகின்றனர். அவர்கள் பெயரை குறித்து வைத்துள்ளோம். இந்த ஒருவாரமாக அவர்கள் செய்ததை எத்தனை நாள் ஆனாலும், மன்னிக்க மாட்டோம். 


மேலும் படிக்க | சிறையில் இருந்து வெளிவந்த 5 மணி நேரத்தில் சென்னையில் நடந்த கொலை: பின்னணி இதுதான்


செந்தில்பாலாஜியின் மீது நடவடிக்கை எடுக்க மாநில அரசு தயங்குகிறது. ஆனால், சமூக வலைதளங்களில் பதிவிட்டதற்காக பாஜக தொண்டர்கள் கரூரில் கைது செய்யப்படுகின்றனர்.  மோடியின் ஆட்சி சாதனையை பேச கூடி உள்ளோம். உலகத்தில் நம்பர் 1 பிரதமர் என்று பெயர் வாங்கியுள்ளார். எலன்மஸ்க் மோடியின் மிகப்பெரிய ரசிகன் என்று கூறுகிறார். ஆன்லைன் பரிவர்த்தனையை உலகத்துக்கே மோடி கற்று தருகிறார் என சுந்தர் பிச்சை கூறுகிறார். உலக தலைவர்கள், தொழிலதிபர்கள் பிரதமர் மோடியை பாராட்டி, விருது வழங்குகின்றனர்.  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனக்குத்தானே தன்னை நம்பர் ஒன் என்று சொல்லுகிறார். மணல் கடத்தல், கள்ளச் சாராயம், அழுகிய முட்டை கொடுப்பதில், கஞ்சா என அனைத்திலும் நம்பர் ஒன் நமது முதல்வர். அமைச்சர்களால் தூக்கம் போய்விட்டது என இந்திய வரலாற்றில் கூறிய ஒரே முதல்வர் நமது முதல்வர். 


கொலை, கொள்ளை குற்றவாளிகளை பிடிக்காமல், சமூக ஊடகங்களில் பதிவிடுபவர்களை கைது செய்கிறார்கள். 30 ஆயிரம் கோடி ஒரே ஆண்டில் திமுக ஊழல் செய்ததாக அமைச்சர் பி.டி.ஆர் சொல்கிறார். 10 ரூபா பாலாஜி கிடையாது. 11.05 பாலாஜி என நான் சொல்கிறேன். 11.05 மணல் அள்ள சொன்னவர் செந்தில்பாலாஜி. கடந்த ஆறு மாதத்தில்,  தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மணல் கடத்தலை தடுக்கும் அதிகாரிகளை திமுகவினர் தாக்குகின்றனர். இதுதான் திமுக ஆட்சியின் சாட்சி. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் யூரியா தட்டுப்பாடு ஏற்பட்டது. இனிமேல் இந்தியா யூரியாவை  உற்பத்தி செய்து வழங்க உள்ளோம் என்று மோடி கூறுகிறார். அதற்கான ஆலைகளை அமைத்துள்ளார். 9 ஆண்டுகால மோடி ஆட்சியின் சாதனை இது. காமராஜர் கூறியதை நடத்தி காட்டியவர் மோடி. ஜல்ஜீவன் திட்டம் மூலம் வீடுகளுக்கு குழாய் மூலம் இலவசமாக குடிநீர் வினியோகம். 9 ஆண்டுகளில் முதலமைச்சர் எதுவுமே கொடுக்கவில்லை என்கிறார். அவரது குடும்பத்திற்கு எதுவுமே கொடுக்கவில்லை என்கிறார். 


மேலும் படிக்க | பழம்பெரும் நடிகையுடன் முதல் முறையாக ஜோடி சேரும் ரஜினிகாந்த்! யார் தெரியுமா?


தமிழ்நாட்டு அரசியலில் புரையோடிப்போன கரையான்களில் ஒருவர் செந்தில்பாலாஜி. கைது செய்ததும் நெஞ்சு வலி என்கிறார். அடுத்த 5 நிமிடத்தில் 4 அடைப்பு என அரசு மருத்துவமனை ரிப்போர்ட் வருகிறது. செந்தில்பாலாஜியை பார்க்க அமைச்சர்கள் அனைவரும் ஓடுகின்றனர். பி.டி உசாவை துரைமுருகன் மிஞ்சி விட்டார். இன்னும் 2 ஆண்டுகளில் இந்தியாவிலேயே அதிகமான அறுவை சிகிச்சை செந்தில்பாலாஜிக்குதான் செய்திருப்பார்கள். தவறு செய்தவர்கள் கண்டிப்பாக சிறைக்கு செல்ல வேண்டும். சட்ட விரோதமாக பார்களில் கள்ளச்சாராயத்துக்கு நிகரான மதுபானம் விற்கப்பட்டு பல்வேறு உயிரிழப்பு ஏற்பட்டது.  ஒரே குடும்பத்திற்காக ஆட்சி நடக்கிறது. 1000 கொடுப்பதாக கூறி 27 மாதம் ஆகிவிட்டது. கல்விக்கடன், வேலைவாய்ப்பு, பகுதி நேர ஆசிரியர்கள், செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் என வாக்குறுதிகள் பலவற்றை நிறைவேற்றவில்லை.   


கரூரில் குவாரி உரிமையாளர்களை துன்புறுத்தி திமுகவினர் மிரட்டி வசூல் செய்கின்றனர்.  தமிழகம் முழுவதும் நடைபெறும் வேலை நிறுத்த போராட்டம் குறித்து பேசி, அவர்கள் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.  மோடி வேண்டாம் என எதிர்கட்சிகள் கிளம்பியுள்ளன. கர்நாடக துணை முதல்வர் காவிரி நீர் தமிழ்நாட்டுக்கு இல்லை என்று கூறுகிறார். பாஜக அரசு இருக்கும்போது மேகதாது அணை கட்ட மாட்டோம் என்றது. இவர்கள் கட்டுவோம் என்கின்றனர். கர்நாடக காங்கிரஸ் கூட்டத்துக்கு முதல்வர் போகக்கூடாது. போனால் திரும்ப தமிழகத்திற்குள் வரவிடமாட்டோம். ஒருவேளை மு.க.ஸ்டாலின் கர்நாடக கூட்டத்தை புறக்கணித்தால், பாஜக அவருடன் நிற்போம்.  காவிரி நீரை விட மாட்டோம் என கூறிய கர்நாடக காங்கிரசை கேள்வி எழுப்பாத ஜோதிமணிக்கு எம்.பி பதவி எதற்கு என்று கேள்வி எழுப்பினார்.


மேலும் படிக்க | சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ