காவேரி மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்கள் மீது போலீசார் தடியடி -வீடியோ
திமுக தலைவர் கருணாநிதிக்கு உடல் நலம் பின்னடைவு ஏற்பட்டதை அடுத்து, காவேரி மருத்துவமனை முன்பு தொண்டர்கள் குவித்து வருகின்றனர்.
கடந்த ஜூலை 27-ஆம் நாள் இரவு கலைஞர் கருணாநிதிக்கு ரத்த அழுத்தக் குறைவு ஏற்பட்டதை அடுத்து, அன்று நள்ளிரவே காவேரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் வர வழைக்கப்பட்டு தலைவர் கருணாநிதி அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதை அறிந்த பல திமுக தொண்டர்கள் கோபாலபுரத்திலும், காவேரி மருத்துவமனை முன்பும் குவிய தொடங்கினர்.
இதனைத்தொடர்ந்து திமுக தொண்டர்களும், பொதுமக்களும் கருணாநிதியின் உடல்நிலை குறித்து தங்களுடைய வருத்தத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கலைஞர் கருணாநிதியை பற்றி சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவ தொடங்கின. இதனால் அவரின் உடல் நலம் குறித்து அறிந்துக் கொள்ள தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திமுக தொண்டர்கள் காவேரி மருத்துவமனை முன்பு குவிந்து தொடங்கி உள்ளனர். இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
ஆனால் திமுக தொண்டர்கள் அதிக அளவில் காவேரி மருத்துவமனை வளாகத்தில் குவிந்ததால், அவர்களை கட்டுப்படுத்த போலீசார் தடுப்பு போட்டனர். ஆனாலும் அதையும் மீறி தொண்டர்கள் முன்னேறியதால், போலீசார் தடியடி நடத்தினர்.
இதனையடுத்து திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள், பொதுமக்களும், தொண்டர்களும் அமைதி காக்க வேண்டும். தலைவர் கலைஞர் அவர்களின் உடல்நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டாலும், தற்போது தலைவர் நலமாக, தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கிறார் எனக் கூறியுள்ளார்.