முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உடல் மறைந்தாலும், தனது தத்துவங்களால் அவர் வாழ்ந்து கொண்டிருப்பார் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதி மறைந்து ஓராண்டு ஆன நிலையில், அவரின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை அண்ணா சாலையில் இருந்து அவரது நினைவிடம் நோக்கி அமைதிப் பேரணி நடைபெற்றது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்துகொண்டனர். நினைவு தினத்தை ஒட்டி அவரது சமாதி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.


முக ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள், கவிஞர் வைரமுத்து ஆகியோர் இந்த ஊர்வலத்தில் கலந்துக்கொண்டனர். கருணாநிதியின் நினைவிடத்துக்குச் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் கலந்துகொண்டு, கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் வைரமுத்து பேசினார். அப்போது அவர் தெரிவிக்கையில்., 


''தத்துவங்களால் இந்த ஒரு தலைவன் வாழ்கிறான், தன் வாழ்நாளெல்லாம் எந்தெந்தத் தத்துவங்களுக்காகப் போராடினானோ, அந்தத் தத்துவங்கள் உயிர்ப்புடன் இருக்கும் வரை, தலைவன் மரிப்பதில்லை.


அவரின் தத்துவங்கள் இன்னும் உயிரோடு இருக்கின்றன. இருமொழிக் கொள்கை உயிருடன் உள்ளது. இன மீட்சி, மாநில சுயாட்சி உயிரோடு இருக்கின்றன. அவர் போராடிய இன, மொழி, எழுச்சிக்கான காரணங்கள் உயிர்ப்புடன் இருக்கின்றன. அந்தத் தத்துவங்கள் உயிருடன் இருக்கும் வரை, கலைஞர் மரணிப்பதில்லை.


தத்துவங்களால் அவர் வாழ்ந்துகொண்டே இருப்பார். தமிழ்நாடு அவரை நினைத்துக்கொண்டே இருக்கும். ஓராண்டு என்பது காலம் சொல்கிற கணக்கு. ஆனால் கலைஞர் மறக்கப்படுவதில்லை'' என தெரிவித்தார்.