புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் உள்ள மேற்கு புறவழிச்சாலைக்கு கருணாநிதியின் பெயர் சூட்ட ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி மறைந்த பின்னர் அவரது புகழை போற்றும் வகையில் புதுவை அரசு சார்பில் கருணாநிதிக்கு சிலை அமைக்க வேண்டும் என்று புதுவை தி.மு.க.வினர் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதனை புதுவை அரசு ஒப்புதல் அளித்துள்ளது.


புதுவையில் முக்கிய சாலை சந்திப்பில் கருணாநிதிக்கு வெண்கல சிலை அமைக்க அரசு முடிவு செய்தது. மேலும், புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் கருணாநிதி பெயரில் இருக்கை அமைக்கவும், புதுவை 100 அடி சாலையில் உள்ள இந்திரா சதுக்கம் முதல் ராஜீவ்காந்தி சதுக்கம் உட்பட்ட பகுதிக்கும், காரைக்காலில் அமைய உள்ள மேற்கு புற வழிச்சாலைக்கும் டாக்டர் கலைஞர் சாலை என்று பெயர் சூட்ட முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவையில் கடந்த ஆண்டு முடிவு எடுக்கப்பட்டது.


இதற்காக பொதுப்பணித்துறை சார்பில் அனுப்பிய கோப்புக்கு, கவர்னர் கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளதாக ராஜ் நிவாஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை பின்னர் வெளியிடப்பட்டு முறைப்படி கலைஞர் பெயரை புதுவை மற்றும் காரைக்காலில் உள்ள சாலைகளுக்கு சூட்டப்படும் என கூறப்படுகிறது.