காவேரி கூக்குரல் இயக்கத்தின் இந்த வருடத்திற்கான இலக்கு 1.1 கோடி மரங்கள்!!
ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினத்தன்று தமிழகமெங்கும் மரம் நடும் நிகழ்வுகளோடு காவேரி கூக்குரல் இயக்கத்தின் இலக்குக்கான பணிகள் துவங்கவுள்ளன.
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும், இவ்வாண்டு இலக்கான 1.1 கோடி மரங்களை நடத் துவங்குகிறது காவேரி கூக்குரல் இயக்கம்.
கடந்த 25 வருடங்களாக சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கான பணிகளை செய்துவரும் ஈஷா, காவேரி கூக்குரல் திட்டத்தின் மூலம் தமிழக, கர்நாடக மாநிலத்தில் காவிரி வடிநில பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில், 242 கோடி மரங்களை நடுவது என்ற மாபெரும் செயலை செய்து வருகிறது. அதில் தமிழகத்திற்கான இந்த ஆண்டின் இலக்கு 1.1 கோடி மரங்கள் நடுவது. அதில் தற்போது நடவுக்காலம் துவங்கியுள்ளதால், மரக்கன்றுகள் நடும் பணியை ஈஷா காவேரி கூக்குரல் அமைப்பு மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, இந்தாண்டு காவேரி கூக்குரல் இயக்கம் மூலமாக, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், அரியலூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், கோவை, திருப்பூர், மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட 36 மாவட்டங்கள் மற்றும் பாண்டிச்சேரியில் ஜூன் 4, 5 ஆகிய தேதிகளில் மரக்கன்றுகள் நடும் விழாக்கள் நடத்தப்பட உள்ளன.
இதன்மூலம், சுமார் 140 விவசாயிகளின் நிலங்களில் 1.6 லட்சம் மரக்கன்றுகளை விவசாயிகள் நட உள்ளனர். குறிப்பாக, தேக்கு, செம்மரம், சந்தனம், வேங்கை, மலைவேம்பு, மகோகனி, ரோஸ்வுட் போன்ற பண மதிப்புமிக்க டிம்பர் மரங்களை விவசாயிகள் தங்களின் பொருளாதார தேவைகளுக்காக நடவுள்ளனர். இதுதவிர சைக்கிள் பயணம், மாரத்தான், விழிப்புணர்வு வாசகங்கள் ஏந்தி ஊர்வலங்கள் என பொதுமக்களுக்கு
விழிப்புணர்வு ஏற்படுத்தும் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது.
மண்ணுக்கேற்ற மரங்களை தேர்வு செய்வதில் தொடங்கி எந்தெந்த மரங்களுக்கு எவ்வளவு இடைவெளி விட்டு நட வேண்டும் என்பது வரை முழுமையான ஆலோசனைகளை காவேரி கூக்குரல் இயக்க தன்னார்வலர்கள் விவசாயிகளின் நிலங்களுக்கே நேரில் சென்று இலவசமாக வழங்கி வருகின்றனர். விவசாயிகளுக்கான மரக்கன்றுகளை மிகக்குறைந்த விலையான 3 ரூபாய்க்கு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் சட்டமன்ற உறுப்பினர், மேயர், தொழிலதிபர்கள், சமூக ஆர்வலர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என சமூக அக்கறையுள்ள பலரும் இந்நிகழ்ச்சிகளில் தன்னார்வத்தோடு பங்கெடுக்கின்றனர்.
இதற்கு முன்பு வேளாண் விஞ்ஞானி திரு.நம்மாழ்வார், திரு.நெல் ஜெயராமன், திரு.மரம் தங்கசாமி ஆகியோரின் நினைவு மற்றும் பிறந்த நாட்களில் இதேபோல், லட்சக்கணக்கில் மரக்கன்றுகள் நடும் பணியை காவேரி கூக்குரல் இயக்கம் முன்னெடுத்தது. இவர்கள் மூவரும் ஈஷாவின் பல்வேறு சுற்றுச்சூழல் பணிகளில் ஆரம்பம் முதல் உறுதுணையாக இருந்து வழிகாட்டிகளாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.
காவேரி கூக்குரல் இயக்கமானது காவேரி நதிக்கு புத்துயிரூட்டுவதற்காகவும், அதை சார்ந்துள்ள விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் சத்குரு அவர்களால் 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இவ்வியக்கத்தின் மூலம் இதுவரை 4.4 கோடி மரங்களை விவசாயிகள் தங்கள் நிலங்களில் நடவு செய்துள்ளனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ