சசிகலா EPS-ஐ விட இளையவர்... குண்டை தூக்கிப்போட்ட கே.சி. பழனிச்சாமி - என்ன மேட்டர்?
Edappadi Palanisamy News: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சசிகலாவை விட வயதில் மூத்தவர் என்று அக்கட்சியின் முன்னாள் மக்களவை உறுப்பினர் கே.சி. பழனிசாமி கூறியுள்ளார். இதன் பின்னணி என்ன என்பதை இதில் காணலாம்.
KC Palanisamy EPS News: மக்களவை பொதுத்தேர்தலின் வாக்குப்பதிவு நாடு முழுவதும் வரும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் மொத்தம் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. வரும் ஏப். 19ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கும் நிலையில், ஜூன் 1ஆம் தேதி கடைசி கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் முதல் கட்டத்திலேயே தமிழ்நாட்டின் 39 தொகுதிகளிலும், புதுச்சேரியின் 1 தொகுதியிலும் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும்.
தேசிய அளவில் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் திமுக தமிழ்நாட்டில் தலைமை வகிக்கிறது. திமுக நேரடியாக 21 தொகுதியில் போட்டியிடுகிறது. நாமக்கல் தொகுதியில் கொமதேக உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் நிலையில், பிற கூட்டணி கட்சிகளுக்கு 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் இந்த தேர்தலை மூன்றாவது அணியாக சந்திக்கிறது. பாஜகவுடன் பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், அமமுக, ஓபிஎஸ் அணி உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி வைத்துள்ளன.
33 தொகுதியில் அதிமுக
பாஜக 19 தொகுதியில் தனித்து போட்டியிடும் நிலையில், கூட்டணி கட்சியில் 4 வேட்பாளர்கள் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றனர். பாமகவுக்கு 10 தொகுதிகள், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 3 தொகுதிகள், அமமுகவுக்கு 2 தொகுதிகள், ஓபிஎஸ் அணிக்கு 1 தொகுதி கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த மக்களவை தேர்தல், சட்டப்பேரவை தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் என அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த பாஜக இம்முறை தமிழ்நாட்டில் தனது சொந்த பலத்தை பார்க்க தனியாக இறங்கியுள்ளது.
மேலும் படிக்க | மு.க.ஸ்டாலின் பொம்மை முதலமைச்சர்! அண்ணாமலை கடும் விமர்சனம்
பாஜக உடன் கூட்டணியை முறித்துக்கொண்ட அதிமுக இம்முறை பெரியளவில் தனித்தே தேர்தலை சந்திக்கிறது. கூட்டணியில் தேமுதிக 5 தொகுதிகளிலும், எஸ்டிபிஐ 1 தொகுதியிலும் போட்டியிடுகின்றன. அதில், அதிமுக 33 தொகுதிகளில் தனித்து போட்டியிடும் நிலையில், எஸ்டிபிஐ சார்பில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடும் நெல்லை முபாரக் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்.
அனல் பறக்க பிரச்சாரம்
வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், வேட்புமனுவை திரும்ப பெற நாளை தான் கடைசி நாளாகும். தற்போது அனைத்து கட்சிகளும் தற்போது சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. திமுகவில் முதலமைச்சர் ஸ்டாலின் மட்டுமின்றி, அமைச்சர்கள் பலரும் பிரச்சாரத்தில் உள்ளனர். குறிப்பாக, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பிரச்சாரங்கள் சமூக வலைதலங்களில் பலரின் கவனத்தை கவர்கின்றன.
அவரின் AIIMS செங்கல் பிரச்சாரத்தை இம்முறையும் தொடரும் அவர், இபிஎஸ் சசிகலாவின் கால்களில் விழுந்து வணங்கும் புகைப்படத்தை காண்பித்து,'இதேபோல் நான் இருக்கும் புகைப்படங்களை அவரால் காட்ட முடியுமா' என பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இதுகுறித்து எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது,"தான் வயதில் பெரியவரின் கால்களில் விழுந்ததில் என்ன தவறு" என பதிலளித்தார்.
இபிஎஸ் மூத்தவர்...
இந்நிலையில், முன்னாள் அதிமுக மக்களவை உறுப்பினர் கே.சி. பழனிசாமி இதில் எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுத்துள்ளார். அதாவது, எடப்பாடி பழனிசாமி பிறந்த தேதி 20.03.1954 என்றும், சசிகலா பிறந்த தேதி (18.08.1954) என்றும் அவரது X தளத்தின் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம், சசிகலா எடப்பாடி பழனிசாமியை விட இளையவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, இபிஎஸ் - ஓபிஎஸ் இரு தரப்பையும் விமர்சித்து வரும் கே.சி. பழனிசாமி ஒருங்கிணைந்த அதிமுக மீண்டும் அமைய வேண்டும் என கோரிக்கை வைத்து வருகிறார்.
மேலும், அவர் அந்த பதிவில்,"எந்த பொதுத்தேர்தலை சந்தித்து எடப்பாடி பழனிசாமி முதல்வரானார்? எந்த தொண்டர்கள் வாக்களித்து பொதுச்செயலாளர் ஆனார்?, இரண்டும் இல்லையே" என்றார். அதுமட்டுமின்றி, அதிமுக சார்பில் மக்களவை தேர்தலில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்கள் மீதும் கே.சி. பழனிசாமி தொடர்ந்து விமர்சனம் வைத்து வருகிறார்.
'தேர்தல் முடிவுகள் உணர்த்தும்'
அதில்,"போட்டியிடுபவர்கள் யாரும் மிட்டா மிராசு அல்ல சாதாரண தொண்டர்கள் என்று கூறும் எடப்பாடி பழனிசாமி ரூ. 600 கோடி சொத்து உள்ள, மூன்று மாதங்களுக்கு முன் பாஜகவில் இருந்து வந்து அதிமுகவில் இணைந்த ஈரோடு வேட்பாளரிடம் எவ்வளவு வாங்கிக்கொண்டு சீட்டு கொடுத்தார்? ஜெயலலிதா அம்மாவால் ராவணனோடு கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ராவணனின் பினாமி நாமக்கல் வேட்பாளர் தமிழ்மணிக்கு எதற்கு சீட்டு கொடுத்தார்?. பல தொகுதிகளில் காண்ட்ராக்டர்களும், கமிசன் ஏஜென்ட்களும், வேறு கட்சியில் இருந்து சமீபத்தில் மாறிவந்தவர்களுக்கு தான் சீட்டு கொடுக்கப்பட்டுள்ளது.
ஒன்றுபட்ட அதிமுக உருவாக்க வேண்டும் என்பது தான் தொண்டர்கள் விருப்பம். ஆனால் அதிமுகவை தன் குடும்பச்சொத்து ஆக்குவது தான் எடப்பாடி பழனிசாமியின் விருப்பமாக உள்ளது. எதற்கு தொண்டர்கள் மீது பழிபோடுகிறீர்கள். இன்றைய அதிமுக வேட்பாளர்கள் களத்தில் திணறுவது அதிமுக ஒன்றுபட்டு இல்லை என்பதால் தான் அது உங்கள் சுயநலத்தின் காரணமாக உங்களுக்கு புரியவில்லை. தேர்தல் முடிவுகள் அதை உங்களுக்கு உணர்த்தும்" என குறிப்பிட்டுள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ