வைப்பாறு இணைப்புத் திட்டத்திற்கு கேரளம் ஒப்புதல் அளிக்க வேண்டும்: PMK
தமிழ்நாடு, கேரளம் ஆகிய இரு மாநிலங்களும் ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல்படுவது தான் இரு மாநில மக்களுக்கும் பயனளிக்கும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிவுரை!!
தமிழ்நாடு, கேரளம் ஆகிய இரு மாநிலங்களும் ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல்படுவது தான் இரு மாநில மக்களுக்கும் பயனளிக்கும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிவுரை!!
இது கூர்த்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது; தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களின் பாசன வசதிக்கான பம்பா- அச்சன்கோவில் - வைப்பாறு நதிகள் இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்க முடியாது என்றும், இந்தத் திட்டத்தை கேரள அரசு தடுத்து நிறுத்தும் என்றும் அம்மாநில நீர்ப்பாசனத் துறை அமைச்சர் கிருஷ்ணன் குட்டி கூறியிருக்கிறார். இரு மாநில உறவுகளை பாதிக்கும் வகையிலான கேரள அமைச்சரின் இந்த பேச்சு கண்டிக்கத்தக்கது.
நாட்டின் ஒரு பகுதியில் வெள்ளமும், மறு பகுதியில் வறட்சியும் நிலவும் கொடுமை இந்தியாவில் சாதாரணமான ஒன்றாகி விட்டது. இதற்கு முடிவு கட்டும் நோக்குடன் தான் நதிகள் இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. தேசிய அளவில் இதற்காக பொதுவான செயல்திட்டம் தயாரிக்கப்படவில்லை என்ற போதிலும், மாநிலங்களிலும், மாநிலங்களுக்கு இடையிலும் தேவையான, சாத்தியமுள்ள பகுதிகளில் நதிகள் இணைப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் தான் பம்பா-அச்சன்கோவில் - வைப்பாறு இணைப்புத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
கேரளத்தில் ஓடும் பம்பா, அச்சன்கோவில் ஆறுகளை தமிழகத்தில் ஓடும் வைப்பாற்றுடன் இணைத்து, அந்த ஆறுகளின் மிகை நீரை தமிழகத்தில் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களின் பாசனத்திற்காக திருப்பி விடுவது தான் இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும். இத்திட்டம் செயல்படுத்தப் பட்டால், சங்கரன்கோவில், கோவில்பட்டி, சிவகிரி, திருவில்லிபுத்தூர், இராஜபாளையம், சாத்தூர் தென்காசி ஆகிய வட்டங்களில் 91,400 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதால் கேரளாவிற்கு எந்த வகையிலும் பாதிப்போ, இழப்போ ஏற்படாது. ஏனெனில், ஏனெனில், பம்பா- அச்சன்கோவில் - வைப்பாறு இணைப்புத் திட்டம் மூலம் தமிழ்நாட்டிற்கு கிடைக்கும் தண்ணீரின் அளவு ஆண்டுக்கு 22 டி.எம்.சி, மட்டும் தான். இது பம்பா, அச்சன்கோவில் ஆறுகளின் மொத்த உபரி நீரில் ஐந்தில் ஒரு பங்கு மட்டும் தான். பம்பா - அச்சன்கோவில் ஆறுகளில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் 110 டி.எம்.சி தண்ணீர் வீணாகும் நிலையில், அதில் 22 டி.எம்.சி நீரை தமிழ்நாட்டுக்கு தருவது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தி விடாது. அதேநேரத்தில் இந்த தண்ணீர் தமிழகத்தில் ஒரு லட்சம் உழவர் குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை உறுதி செய்யும்.
அதுமட்டுமின்றி, இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதால் கேரளத்திற்கு 500 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். பம்பா- அச்சன்கோவில் - வைப்பாறு இணைப்புத் திட்டத்தால் இரு மாநிலங்களுக்கும் பயன் கிடைக்கும் என்ற நிலையில், அந்தத் திட்டத்தை செயல்படுத்தி பயனடைவது தான் அறிவார்ந்த செயலாக இருக்கும். அதற்கு மாறாக, இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதன் மூலம் கேரள அரசு எதை சாதிக்கப் போகிறது? என்பது தெரியவில்லை. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வு செய்த தேசிய நீர் மேம்பாட்டு முகமை இந்த இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த முடியும் என்றும் கூறியுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு ஒப்புக்கொண்டிருக்கும் போதிலும், கேரள அரசு நதிகள் இணைப்பு திட்டத்தை ஏற்க முடியாது என்று கூறி பிடிவாதம் பிடிக்கிறது.
பம்பா- அச்சன்கோவில் - வைப்பாறு இணைப்புத் திட்டத்தை எதிர்ப்பதற்காக கேரளம் கூறும் காரணங்கள் நியாயமற்றவை; தர்க்கமற்றவை. பம்பா, அச்சன்கோவில் உள்ளிட்ட கேரளத்தில் ஓடும் 6 ஆறுகளின் நீரோட்டம் 2051-ஆண்டு வாக்கில் குறைந்து, தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு விடும் என்பதற்காகவே இத்திட்டத்தை எதிர்ப்பதாக கேரளம் கூறுகிறது. இதற்கெல்லாம் மேலாக கேரள ஆறுகளின் தண்ணீர் தமிழ்நாட்டுக்கு செல்ல அனுமதிக்கக்கூடாது என கடந்த 20 ஆண்டுகளாகவே கேரள அமைச்சர்களும், அரசியல் தலைவர்களும் கூறி வருகின்றனர். இது அப்பட்டமான சுயநலம் என்பதைத் தவிர வேறில்லை.
கேரளத்தின் தேவைக்கான காய்கறிகள், அரிசி, பால் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைப் பொருட்கள் தமிழகத்தில் இருந்து தான் அனுப்பப்படுகின்றன. கேரளம் அதன் பெரும்பான்மையான தேவைகளுக்கு தமிழகத்தை சார்ந்து தான் இருக்க வேண்டும். அதனால், தமிழ்நாடு, கேரளம் ஆகிய இரு மாநிலங்களும் ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல்படுவது தான் இரு மாநில மக்களுக்கும் பயனளிக்கும். இந்த உண்மையை உணர்ந்து பம்பா- அச்சன்கோவில்- வைப்பாறு இணைப்புத் திட்டத்திற்கான எதிர்ப்பை கேரள அரசு கைவிட வேண்டும்; இத்திட்டத்திற்கான ஒப்புதலை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.