கொடநாடு கொலை வழக்கு: சயான் மீண்டும் மருத்துமனையில் அனுமதி
கொடநாடு காவலாளி கொலை வழக்கில் கைதான சயான் மீண்டும் கோவை மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டத்திலுள்ள மறைந்த ஜெயலலிதாவிற்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் காவலாளியாக பணியாற்றி வந்த ஓம் பகதூர் கடந்த ஏப்ரல் 24-ம் தேதி மர்ம நபர்களால் கொல்லப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக சோலூர் மட்டம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, இதில் தொடர்புடைய 11 பேரை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்த கனகராஜ் கடந்த ஏப்ரல் 28-ம் தேதி சாலை விபத்தில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அவரது நண்பரும், 2-வது குற்றவாளியுமான சயான் ஏப்ரல் 29-ம் தேதி கார் விபத்தில் படுகாயமடைந்தார்.
இதன் காரணமாக கோவை அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அவர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் நேற்று போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் விசாரணைக்காக கோத்தகிரி காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
அதன் பின்னர் நேற்று மாலை கோத்தகிரி நீதிமன்றத்தில் சயானை போலீசார் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீதர் சயானை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இந்நிலையில், சயானுக்கு கையில் வலி ஏற்பட மீண்டும் கோவையில் உள்ள அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.