ஆந்திரா மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நதி நீர் பூண்டியை வந்தடைந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பருவ மழை பொய்த்த நிலையில் சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி மற்றும் புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளின் நீர்மட்டம் மிகவும் குறைந்து உள்ளது. இதன்காரணமாக சென்னையில் குடிநீர் வினியோகம் பாதிக்கப்படும் சூழ்நிலை நிலவி வருகிறது.


இதனை கருத்தில் கொண்டு ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டு திட்டத்தின்படி தண்ணீர் திறந்து விடும்படி கடந்த மாதம் ஜதராபாத்தில் நடைபெற்ற கிருஷ்ணா நதி நீர் மேலாண்மை வாரிய கூட்டத்தில் தமிழக பொதுப் பணித்துறையை சேர்ந்த உயர்மட்ட அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தனர்.


தமிழக அரசு விடுத்த கோரிக்கையை ஏற்று கடந்த 7-ஆம் தேதி கண்டலேறு அணையிலிருந்து ஆயிரத்து 750 கன அடி வீதம் திறந்துவிடப்பட்டது. பின்னர் நேற்று முன்தினம் 2000 கன அடியாக உயர்த்தி திறந்து விடப்பட்டது.


கண்டலேறு அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று மாலை பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திற்கு வந்து சேர்ந்தது. பூண்டி நீர்த்தேக்கத்தில் மொத்த கொள்ளளவான 3,241 மில்லியன் கனஅடியில் இன்றைய நிலவரப்படி அங்கு 157 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.


தற்போது 15 கனஅடி நீர் வந்து கொண்டிருப்பதால்  இனி தொடர்ந்து நீர்வரத்து அதிகரிக்கும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.