திமுக - காங்கிரஸ் இடையிலான பிரச்னைக்கு முற்றுப்புள்ளி?
திமுக - காங்கிரஸ் இடையிலான பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்பது பற்றி பேசியுள்ளோம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
திமுக - காங்கிரஸ் இடையிலான பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்பது பற்றி பேசியுள்ளோம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு, மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் வெளியிட்ட கருத்து மற்றும் அதனைத் தொடர்ந்து தலைவர்களின் வார்த்தை மோதல், தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது. கூட்டணியில் விரிசல் ஏற்படலாம் என்ற கருத்தும் நிலவியது. இந்நிலையில் தற்போது காங்கிரஸ்-திமுக கூட்டணி மத்தியில் எந்த விரிசலும் இல்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
முன்னதாக புதுவை முதலமைச்சர் நாராயணசாமி இன்று காலை சென்னை வந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். இச்சந்திப்பினை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக-காங்கிரஸ் கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து தமிழ்மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பிற்பகள் மதியம் அண்ணா அறிவாலயம் சென்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான கே.வி.தங்கபாலு, கே.ஆர்.ராமசாமி ஆகியோர் உடனிருந்தனர்.
இந்த சந்திப்புக்குப் பிறகு, செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவிக்கையில்., திமுக - காங்கிரஸ் இடையிலான பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்பது பற்றி பேசியுள்ளோம். இனி கருத்து வேறுபாடு எழுந்தால் நானும் ஸ்டாலினும் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்போம். மற்றவர்கள் யாரும் தலையிட தேவையில்லை என தெரிவித்துள்ளார். மேலும் தமிழக சட்ட சபை தேர்தல் மற்றும் அதன் பின்னர் வரும் தேர்தலிலும் திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடரும் எனவும் அவர் தெரிவித்தார்.